தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாள்களுக்கு 5,000 கன அடி நீர் திறக்க உத்தரவு!

தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாள்களுக்கு தினமும் 5,000 கன அடி நீரை திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் இன்று உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக அணைகளில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு ஏற்கெனவே உத்தரவிட்டது. அதன்படி, தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்த நிலையில் கர்நாடக அரசு திடீரென தண்ணீர் வழங்குவதை நிறுத்தி விட்டது.

இந்த நிலையில் 2 ஆவது கட்டமாக 15 நாள்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் தமிழகத்துக்கு திறந்துவிட காவிரி ஒழுங்காற்றுக் குழு, காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு பரிந்துரை செய்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். தங்களிடம் போதுமான தண்ணீர் இல்லை எனக் கூறி தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது என்று கர்நாடக அரசும் கூறியது.

இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசரக் கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் இன்று (திங்கள்கிழமை) நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாள்களுக்கு தினமும் 5,000 கன அடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னதாக, காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்த பிறகும் கர்நாடகம் தண்ணீர் தர மறுப்பது குறித்து தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அவசர மனு வருகிற செப். 21 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.