ரஜினிகாந்த் கர்நாடகாவிற்குள் நுழையக் கூடாது: மிரட்டல் விடுத்த வாட்டாள் நாகராஜ்

கர்நாடக மாநிலத்தில் பிறந்த நடிகர் ரஜினிகாந்த் எங்களுக்கு ஆதரவாக இல்லாததால், அவர் கர்நாடகாவிற்குள் நுழையக் கூடாது என வாட்டாள் நாகராஜ் மிரட்டல் விடுத்துள்ளார்.

கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டுக்கு இடையேயான தண்ணீர் விவகாரத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் வழிகாட்டிய அளவுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

இந்த விவகாரம் கர்நாடகாவில் பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. அங்குள்ள மண்டியா, சாம்ராஜ் நகர், மைசூரு, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல், மைசூரு பசவேஸ்வரா சர்க்கிளில் கர்நாடகா ராஜ்ய ரைத்தா சங்கம் மற்றும் ஹசிரு சேனா இயக்கத்தினர் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவப்படத்தை கிழித்தெறிந்தனர்.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய கன்னட அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ், “கர்நாடகாவில் எத்தனை தமிழர்கள் எத்தனை ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். அவர்கள், காவிரி தண்ணீரை குடித்து வருகின்றனர்.

அவர்கள், காவிரி தண்ணீரை குடிக்க வேண்டுமென்றால் தமிழக முதல்வர் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில் ரஜினிகாந்தின் நிலைப்பாட்டை அறிய விரும்புகிறேன். ரஜினிகாந்த் கர்நாடகாவிற்குள் நுழையக் கூடாது.

அவர், கர்நாடகாவிற்கு ஆதரவாக நிற்பாரா அல்லது தமிழ்நாட்டிற்கு ஆதரவாக நிற்பாரா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.