கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம்.. வெறிச்சோடிய பேருந்து நிலையங்கள்

காவிரி விவகாரத்தில் கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், பெங்களூருவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் 4 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

காவிரியில் அக்டோபர் 15 ஆம் தேதி வரை விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் திறக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு, ஒழுங்காற்று குழு பரிந்துரைத்துள்ளது. இதனை ஏற்க மறுத்துள்ள கர்நாடக அரசு, கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 2,696 கன அடி நீரை திறந்து விட்டுள்ளது. இந்நிலையில், காவிரியில் நீர் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகாவில் விவசாயிகள் மற்றும் கன்னட அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. குறிப்பாக பெங்களூரு, மாண்டியா உள்ளிட்ட மாவட்டங்களில் காங்கிரஸ் எம்.பி.க்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடந்த செவ்வாய் கிழமை பெங்களூருவில் பந்த் நடைபெற்ற நிலையில், இன்று மாநிலம் முழுவதும் 40 கன்னட அமைப்புகள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பந்த் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அம்மாநிலத் தலைநகர் பெங்களூருவில் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. பெங்களூருவில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. அரசுப் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தனியார் பேருந்துகள் இயக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகா செல்லும் பேருந்துகளை எல்லை வரை மட்டுமே இயக்க, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. அதாவது பெங்களூரு நகரத்திற்கு செல்லக்கூடிய பேருந்துகளை, ஓசூர் ஜூஜூவாடி வரை மட்டுமே இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. கர்நாடக சென்ற தமிழ்நாடு அரசு பேருந்துகளும் இரவு 10 மணிக்குள் மாநிலத்திற்குள் திரும்பின. இந்நிலையில், கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு அரசுப் பேருந்துகளை இயக்கப்போவதில்லை என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு லாரிகளையும் இன்று மாலை 6 மணி வரை கர்நாடகாவிற்குள் இயக்க வேண்டாம் என்று மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் தன்ராஜ் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், கர்நாடக எல்லையை ஒட்டிய தமிழ்நாட்டின் 4 மாவட்டங்களில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு எஸ்.பி.களுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அதாவது, தருமபுரி, ஈரோடு, சேலம், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து கர்நாடகாவிற்கு பேருந்துகளை இயக்குவது தொடர்பாக, கர்நாடக அரசு அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவெடுக்குமாறு எஸ்.பி.-க்களுக்கு டிஜிபி அறிவுறுத்தியுள்ளார். மேலும் இரு மாநிலங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து குறித்து சந்தேகங்களை கேட்பதற்கு பிரத்யேக தொலைபேசி எண்களும் வழங்கப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.