மகளிர் இட ஒதுக்கீடு சட்டமாக மாறினாலும் அமலுக்கு வர பல ஆண்டுகள் ஆகும்: ப.சிதம்பரம்

மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவா் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இந்த மசோதா சட்டமாக மாறினாலும், யதார்த்தத்தில் அமலுக்கு வருவதற்கு பல ஆண்டுகள் ஆகும் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில், நாரி சக்தி வந்தன் அதிநியம்(பெண்களுக்கு அதிகாரமளித்தல் சட்டம்) என்ற பெயரில் மக்களவை, மாநில சட்டப் பேரவைகளில் மகளிருக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது.

இது மக்களவையில் 2 உறுப்பினர்கள் தவிர, இதர அனைத்து கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேறியது. மாநிலங்களவையில் எந்த எதிர்ப்புமின்றி ஒருமித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து, குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவா் ஒப்புதலைப் பெறுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டது. அவரது ஒப்புதல் பெற்றவுடன் இந்த மசோதா சட்டமாகும்.

இந்த நிலையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள உதவும் இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர், துணைத் தலைவா் கையொப்பமிட்டு ஒப்புதல் அளித்துள்ளனர்.

இதையடுத்து, மகளிர் இடஒதுக்கீடு மசோதா சட்டமாகியுள்ளது என்று அரசு கூறியுள்ளது. இனி அரசமைப்பு 106 ஆவது திருத்தச் சட்டம் என்று அதிகாரப்பூர்வமாக அறியப்படும்.

இந்த நிலையில், மகளிர் இடஒதுக்கீடு மசோதா சட்டமாக மாறினாலும், யதார்த்தத்தில் அமலுக்கு வருவதற்கு பல ஆண்டுகள் ஆகும் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

இது குறித்து எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
கடந்த சில ஆண்டுகள் வரை அமல்படுத்த முடியாமல் இருந்த ஒரு சட்டத்தை கொண்டுவருவதால் என்ன பயன்? என கேள்வி எழுப்பியுள்ள சிதம்பரம், இந்த மசோதா சட்டமாக மாறியிருந்தாலும், ஆனால் 2029 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக கூட இந்த சட்டம் அமலுக்கு வராது.

நீர் நிரம்பி பாத்திரத்தில் நிலவின் ஒளி பிரதிபலிப்பது போன்ற, ஒரு மாயை தான் இந்த சட்டம் என விமர்சித்துள்ள சிதம்பரம், பலர் கூறியது போல, வரும் தேர்தல் நாடகத்திற்காக இந்த மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.