தொடரும் ஆசிரியர்கள் போராட்டம் – அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு!

ஆசிரியர்கள் போராட்டம் தொடர்பாக முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ்.

ஆசிரியர்கள் போராட்டம்
கடந்த செப்டம்பர் 28-ம் தேதி முதல் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் ஆசிரியர்கள் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கினர். சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், போராட்டத்தை கைவிடாமல் உறுதியாக இருந்து வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்கு கெடு அளிக்கப்பட்ட போதும் தங்களின் கோரிக்கைகள் தொடர்பாக அரசின் சார்பில் முறையான அறிவிப்பு வரும்வரை போராட்டம் தொடரும் என்று ஆசிரியர் சங்கங்கள் கூறினர்.

சமீபத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ‘கோரிக்கைகளை முதலமைச்சருடன் கலந்து ஆலோசனை செய்து விரைவில் முடிவை அறிவிக்கிறோம்’ என்று தெரிவித்தார்.

அமைச்சர் அறிவிப்பு
இந்நிலையில் ஆசியர்களின் போராட்டம் குறித்து தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாவது “பகுதி நேர ஆசிரியர்கள் 10,359 பேர் பணியில் உள்ளனர்.

அவர்களுக்கான ஊதியம் 12,500 ஆக உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கு ரூ. 10 லட்சத்தில் மருத்துவக் காப்பீடும் வழங்கப்படும். சம வேலை சம ஊதியம் தொடர்பாக குழு அமைக்கப்பட்டு 3 மாதத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.

ஆசிரியர்கள் இதனை ஏற்று பணிக்கு திரும்ப வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.