பெங்களூரில் போக்குவரத்து பிரச்னைகளை தீர்க்க 190 கிமீ சுரங்கப்பாதை

பெங்களூரு நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க 190 கிமீ சுரங்கப்பாதை அமைக்க முன்மொழியப்பட்டுள்ளதாகவும், அதற்கான பொது டெண்டர்கள் 45 நாட்களுக்குள் வழங்கப்படும் என்றும் கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார் தெரிவித்தார்.

செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசுகையில், “பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க 190 கிமீ நீள சுரங்கப்பாதை அமைக்க முன்மொழியப்பட்டுள்ளது, அதற்கு 8 நிறுவனங்கள் தகுதி பெற்றுள்ளன. இந்த நிறுவனங்கள் அறிக்கையை சமர்ப்பித்து 45 நாட்களுக்குள் பொது டெண்டர்களை விட தயாராகி வருகிறோம். சுரங்கப்பாதை எப்படி இருக்க வேண்டும், நான்கு அல்லது ஆறு வழிச்சாலையாக இருக்க வேண்டுமா, எங்கிருந்து துவங்கி எங்கு முடிய வேண்டும் என்பது குறித்து ஆய்வு செய்து இந்த நிறுவனங்கள் அறிக்கை அளிக்கும். மேலும், நகர் முழுவதும் விரிவாக்கம் செய்ய வேண்டுமா என்பது குறித்தும் முடிவு எடுக்கப்படும்” என்றார்.

பெங்களூரு நகர மேம்பாடு இலாகாவை வைத்திருக்கும் துணை முதல்வர் டிகே சிவக்குமார், இந்த திட்டம் மிகப் பெரியது என்றும் அதிக அளவு நிதி தேவைப்படுவதால், அதை பல கட்டங்களில் செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

”தற்போதைக்கு 190 கி.மீ. முன்பொழியப்பட்டுள்ளது. பெல்லாரி சாலை, பழைய மெட்ராஸ் சாலை, எஸ்டீம் மால் சந்திப்பு முதல் மேக்ரி சர்க்கிள் வரை, மில்லர் சாலை, சாளுக்கிய சர்க்கிள், டிரினிட்டி சர்க்கிள், சர்ஜாபூர் சாலை, ஓசூர் சாலை, கனகபுரா சாலை முதல் கிருஷ்ணாராவ் பூங்கா வரை, மைசூர் சாலையிலிருந்து சிர்சி சர்க்கிள், மகடி சாலை, துமகுரு சாலையிலிருந்து யஷ்வந்த்பூர் சந்திப்பு வரை, வெளிவட்ட சாலை, கோரகுண்டேபாளையம், கே.ஆர்.புரம், சில்க் போர்டு பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த பகுதிகளை முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்துள்ளோம். சுரங்க பாதையை எங்கு, எப்படி அமைக்கலாம் என்பது குறித்து அந்த நிறுவனங்கள் ஆய்வு செய்ய உள்ளன” என்றார் சிவக்குமார். மேலும் பெங்களூருவுக்கு குறைந்தபட்சம் நான்கு வழிச் சுரங்கப் பாதை தேவை என்றார்.

மழைக்காலம் முடிவடைந்துள்ள நிலையில், மழைநீர் வடிகால் உள்ளிட்ட மிக முக்கியமான பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு அழுத்தம் கொடுக்கும் பொறுப்பு, தலைமை பொறியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் சிவக்குமார் கூறினார்.

கடந்த வாரம் பெங்களூரில் உள்ள வெளிவட்ட சாலையில் ஏற்பட்ட பெரும் போக்குவரத்து நெரிசலை மேற்கோள் காட்டிய சிவக்குமார், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து காவல்துறையினருடன் இந்த பிரச்னை குறித்து விவாதித்ததாக கூறினார். அதோடு அவர், அக்டோபர் 7ஆம் தேதி வெளிவட்டச் சாலையை பார்வையிடுகிறார்.

பெங்களூருவின் போக்குவரத்து நெரிசலை குறைக்க மத்திய அரசின் உதவியை கர்நாடக மாநிலம் நாடுமா என்ற கேள்விக்கு பதிலளித்த துணை முதல்வர் சிவகுமார், “நிச்சயமாக நாங்கள் மத்திய அரசிடம் உதவி கேட்போம். இந்த பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டவுடன், மத்திய அரசிடம் முன்மொழிவை சமர்ப்பிப்போம்” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.