பைக் முதல் பேருந்து வரை.. அனைத்து வாகனங்களுக்கும் வரி உயர்வு

தமிழகத்தின் அனைத்து மோட்டார் வாகனங்களுக்கும் வரியை உயர்த்துவதற்கான சட்ட மசோதா சட்டசபையில் நேற்று நிறைவேறியது.தமிழக சட்டசபையில் போக்குவரத்துத் துறை சிவசங்கர் நேற்று இயங்கூர்திகள் வரிகள் திருத்தச் சட்ட மசோதாவை தாக்கல் செய்தார். மாநிலத்தின் நிதிவளத்தை உயர்த்துவதற்காக இயக்கூர்திகள் வரி விதிப்புச் சட்டத்தில், வரிவிதிப்பு முறைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, சரக்கு வாகனங்கள், வாடகைக்கு இயக்கப்படும் வாகனங்கள், பயணிகள் போக்குவரத்து வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள், ஒப்பந்த வாகனங்கள், ஆம்னி பஸ்கள், அனைத்து வகை புதிய மற்றும் பழைய 2 சக்கர வாகனங்கள், ஆட்டோ உள்ளிட்ட 3 சக்கர வாகனங்கள், கல்வி நிறுவனங்களுக்குச் சொந்தமான பஸ்கள் மற்றும் வாகனங்கள், கட்டுமானத்திற்கு பயன்படும் வாகனங்கள், கார்கள், டாக்சிகள், ‘கேப்’கள் என அனைத்து வகை மோட்டார் வாகனங்களுக்கு புதிய வரியை நிர்ணயிக்கப்படுகிறது.

குறிப்பாக படுக்கையுடன் கூடிய ஆம்னி பஸ்களுக்கு 4,000 ரூபாய் வரை வரி உயர்த்தப்படுகிறது.புதிய இருசக்கர வாகனங்களுக்கான வாழ்நாள் வரி 12 சதவீதம் வரை நிர்ணயிக்கப்படுகிறது. இதே போன்று, புதிய வாகனங்களுக்கான சாலை பாதுகாப்பு வரி, இருசக்கர வாகனங்களுக்கு 375 ரூபாய், இலகுரக வாகனங்களுக்கு 2,250 ரூபாய் மற்ற வாகனங்களுக்கு 3,000 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.

அதே நேரத்தில், அரசின் கொள்கைப்படி பேட்டரி வாகனங்களுக்கு வரி கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் சிவசங்கர் இந்த மசோதாவை தாக்கல் செய்தபோது, காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பாமக வலியுறுத்தியது.மேலும், விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட கட்சிகள் திருத்தம் கொண்டு வர வேண்டும் எனக் கோரினர். இருப்பினும், பெரும்பான்மை ஆதரவோடு மசோதா நிறைவேறியது.

Leave A Reply

Your email address will not be published.