ஜனாதிபதி முறைமையை நீக்க முயன்றால் அதை ஆதரிப்போம் – சுமந்திரன் எம்.பி. தெரிவிப்பு.

”நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறைமையை ஒழிப்பதற்கு முயற்சி எடுக்கப்படுமானால் அதற்கு நாம் முழுமையாக ஆதரவு வழங்குவோம்.”

இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

கொழும்பு ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அந்தப் பேட்டியில் இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு:-

“தான் என்ன செய்ய வேண்டும் என்று தெரியாத நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தடுமாறுகின்றார். மக்களின் ஆணையை இழந்த ஒரு நாடாளுமன்றத்தில் தங்கி இருக்கும் அவர் அதனால் குழப்பத்தில் மூழ்கியுள்ளார்.

இந்த நாடாளுமன்றம் மக்கள் ஆணையை இழந்து விட்டது என்பது கடந்த வருடமே தெட்டத் தெளிவாகியுள்ளது. இல்லையேல் அப்போது பிரதமர் இராஜிநாமா செய்ய வேண்டி வந்திருக்காது. நிதி அமைச்சரும் பதவியை விட்டு விலக வேண்டி நேர்ந்திருக்காது. ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேறி பதவி விலக வேண்டி வந்திராது. ஆகவே, அவர்கள் மக்கள் ஆணையை இழந்து விட்டார்கள் என்பது தெட்டத் தெளிவானது.

நாடாளுமன்றத்தில் அவர்களுக்கு உள்ள பெரும்பான்மை போலியானது. அந்தப் போலியான பெரும்பான்மையில் தங்கித்தான் இந்த நாடாளுமன்றம் இயங்குகின்றது. இந்த ஜனாதிபதியையும் அதுவே தேர்வு செய்தது. அதனால் அத்தரப்புகள் இரண்டும் ஒருவரில் ஒருவர் தங்கி உள்ளார்கள். அந்த நாடாளுமன்றத்தைக் கலைக்காமல் அவர்களைப் பதவியில் தொடர செய்ய வேண்டிய அவசியம் இந்த ஜனாதிபதிக்கு இருக்கின்றது.

ஆனால், இந்த விளையாட்டு மக்களின் விருப்புக்கு – ஆணைக்கு – மாறானது. அது அப்பட்டமான உண்மை. இந்த நிலைமை தொடர்வதை மக்கள் விரும்பவில்லை என்பதும் வெளிப்படையானது. ஆனால் ஆட்சியாளர்களின் நிலைமை இந்தப் போக்கை நீடிப்பது என்பதுதான். மக்களின் ஆணை இல்லாமல் தாங்கள் அதிகாரத்தில் உள்ளார்கள், அதை எப்படி நீடிப்பது என்பதுதான் அவர்களின் சிரத்தை.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் வந்தது. அதற்கான நிதியை விடாமல் தடுத்தார்கள். அதனால் தேர்தல் நடைபெறவில்லை. மக்களை சந்திக்க இடமளிக்கவில்லை.

அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் வருகின்றது. அதற்கு அடுத்த வருடம் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழித்து, நாடாளுமன்றத்தின் மூலம் அதிகாரத்தில் தொடரும் அவர்களின் திட்டம் பற்றி பேசப்ப்டுகின்றது. எனக்கு அது குறித்து விவரம் ஏதும் தெரியாது. ஆனால், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறைமையை ஒழிக்கும் நகர்வு முன்னெடுக்கப்பட்டால் நாம் எப்போதும் அதை ஆதரிக்க வேண்டும். அது, குறுகிய நோக்கத்துக்காகவோ அல்லது சுயநலன்களுக்காகவோ அல்லது வஞ்சக எண்ணத்தோடோ முன்னெடுக்கப்பட்டாலும் கூட அந்த முறைமையை ஒழிப்பதற்கு ஏதேனும் முயற்சி எடுக்கப்பட்டால் – அந்த எதேச்சதிகார முறைமையை நீக்குவதற்கு நாம் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

ஏனென்றால், வேறு வழிமுறைகளில் இந்த முறைமையை ஒழிக்கச் சந்தர்ப்பம் கிடைக்காது. இத்தகைய குழப்பமான நோக்கங்களுக்கு மத்தியில்தான் இந்த முறைமையை ஒழிக்க வாய்ப்பு கிட்டும் என்றால் நாம் அதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த முறைமை எம்மை விட்டுத் தொலைவதற்கு இதைத் தவிர வேறு வாய்ப்பு கிடைக்காது. கிடைத்தால் நாம் தந்திரோபாயமாக அதைப் பயன்படுத்த வேண்டும்.

ஆனால், அப்படி அந்த ஆட்சி முறைமையை ஒழிப்பதற்காக இடைக்கால ஏற்பாடாக இந்த ஜனாதிபதியின் பதவிக் காலத்தை சற்று காலம் நீடிக்க வேண்டும் என்ற திட்டத்துக்கு நாம் இணங்க முடியாது. மக்களின் வாக்களிக்கும் உரிமையை மறுத்துக் காலம் கடத்தும் – அதிகாரத்தில் நீடிக்கும் – திட்டத்துக்கு நாம் ஒத்துவர முடியாது.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.