சமூகத் தொண்டு தான் உண்மையான அரசியல் : கணேஸ்வரவன் வேலாயுதம்

சமூகத் தொண்டு தான் உண்மையான அரசியல் ஆகும். அரசியலை விற்பனை செய்து பொது மக்களுடைய பணத்தைச் சுரண்டும் நடவடிக்கைகளில் ஈடுபடும் வேட்பாளர்களை மக்கள் நிராகரிக்க வேண்டும் என்று யாழ் மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் முதன்மை வேட்பாளரும் சிவன் பவுண்டேசனின் ஸ்தாபகருமான கணேஸ்வரவன் வேலாயுதம் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் , யாழ் மாவட்டத்தில் தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதறடித்து தமிழ் பிரதிநிதித்துவங்களை இல்லாமற் செய்யும் வகையில் பெரும் எண்ணிக்கையிலான சுயேச்சைக் குழுக்களும் கட்சிகளும் களமிறங்கியுள்ளனர்.

இது திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சியாகும். யார் மக்களுக்கு நல்ல சேவை செய்திருக்கின்றோர்களோ அவர்களுக்கு உங்கள் வாக்குகளை வழங்கி வெற்றி பெறச் செய்யுங்கள். நீங்கள் பாராளுமன்றம் சென்று தூங்குபவர்களை பாராளுமன்றம் அனுப்புவது அவசியமில்லை. அவர்கள் வீட்டிலே இருந்து தூங்கலாம். நிச்சயமாக தமிழ் சமூகப் பற்றுறுதிமிக்க இளம் துடிப்புள்ள வேட்பாளர்களால் தான் மக்களுக்கு நன்கு சேவை செய்ய முடியும்.

நாங்கள் வெறுமனே சும்மா வந்து மக்கள் மத்தியில் நின்று வாக்குகளைக் கேட்கவில்லை. ஒவ்வொரு வருடமும் தலா ஒரு கோடி ரூபாய் விகிதம் இம்மாவட்டத்தில் பல்வேறு ரீதியாகத் துன்பப்படும் மக்களுக்கு உதவி செய்து விட்டுத் தான் உங்கள் முன் வாக்குக் கேட்க வந்து நிற்கின்றோம்.
குறிப்பாகச் சொல்லப் போனால் கல்வி, விளையாட்டு, சுகாதாரம், விவசாய மேம்பாடு உள்ளிட்ட எத்தனையோ மக்களுடைய பிரச்சினைகளுக்கு எங்களால் இயன்ற பங்களிப்பைச் செய்துள்ளோம். இத்தகைய வேலைத் திட்டங்களை எந்தவொரு அரசியல்வாதிகளும் செய்யவில்லை. அவர்கள் வெறுமனே வாக்குகளை மட்டும் எடுத்துச் செல்வார்கள். எவையும் செய்யமாட்டார்கள். அவர்கள் எங்களை சமூகத் தொண்டர்கள் என்று கூறுகின்றனர்.

அரசியலில் சென்று மக்களுடைய பணத்தைக் கொள்ளையடிப்பதும் அரச சொகுசு வாகனங்களை வாங்கி அதில் பெரும் இலாபமீட்டுவதும் அவர்கள் அரசியல் எனக் கருதி செயற்படுகின்றனர். அரசியலை விற்பனை செய்து மக்களுடைய பணத்தைச் சுரண்டும் நடவடிக்கைகளிலேயே அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சமூகத் தொண்டு தான் உண்மையான அரசியல் ஆகும். யார் மக்களுக்கு உண்மையான சேவைகளைப் புரியக் கூடியவர் என்பவர்களைத் தெரிவு செய்து வாக்குகளை வழங்கி அவர்களை வெற்றி பெறச் செய்யுங்கள்.

இன்று சில வேட்பாளர்கள் தங்களுடைய கட்சியின் தலைவர் யார் என்று தங்களுடைய சுவரொட்டியில் போடுவதற்கு தயங்குகின்றனர். அவ்வாறாயின் இவர்கள் எப்படியான ஏமாற்றுக்காரர்கள் என்பதை நீங்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். இவர் தான் எங்களுடைய தலைவர் யார் என்று குறித்து தங்களுடைய சுவரொட்டியில் போட முடியவில்லை எனில் எவ்வளவு ஏமாற்றுக் காரர்களாக இருப்பார்கள் என்பதை நீங்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் இவர்களை நம்பாதீர்கள். இவர்கள் மூலம் எமது சமூகத்திற்கு எந்தவொரு நன்மையும் மக்களுக்கு கிட்டப் போவதில்லை. இதுவரையிலும் மக்களுக்கு எவையும் அவர்களால் ஆனதில்லை. எம்மை ஆதரிப்பதன் மூலம் உங்கள் தேவைகளை பிரச்சினைகளையும் தீர்த்து வைக்க முடியும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

– இக்பால் அலி
13-06-2020

Comments are closed.