வாக்குகளுக்காக சிறுபான்மையினரிடம் கையேந்த மாட்டோம் – அமைச்சர் விமல் வீரவன்ச

ஜனாதிபதி தேர்தலைப்போன்று நடைபெறவுள்ள பொதுத்தேர்தலிலும் தமிழ், முஸ்லிம் மக்களிடம் கையேந்த மாட்டோம் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். விரும்பினால் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் பங்குதாரர்களாக மாறலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாங்கள் சிறுபான்மை மக்களை எதிரிகளாக பார்க்காத போதும், அவர்கள் எதிர்களாகவே தம்மை பார்ப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். அதனாலேயே கடந்த ஜனாதிபதி தேர்தலின் போதும் சிறுபான்மையினரின் ஆதரவிற்காக நாங்கள் காத்திருக்கவிலை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் சிறுபான்மையினரின் ஆதரவின்றி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை தமது அரசாங்கம் பெற்றுக்கொள்ளும் எனவும் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது வடக்கு கிழக்கிலுள்ள 80 வீதத்திற்கும் அதிகமான தமிழ், முஸ்லிம் மக்கள் சஜித் பிரேமதாஸவுக்கு வாக்களித்தும் அவர் தோல்வியையே தழுவ முடிந்ததெனவும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது பெரும்பாலான பௌத்த, சிங்கள மக்கள் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு வாக்களித்தது போன்றே அவர் தலைமையிலான இந்த அரசையும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வெற்றியடைய வைப்பார்கள் எனவும் அமைச்சர் விமல் வீரவன்ச நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

Comments are closed.