கேரள குண்டுவெடிப்பில் கைதான மாா்ட்டின் மிகுந்த திறமைசாலி: காவல் துறை

கேரளத்தில் கிறிஸ்தவ பிராா்த்தனைக் கூட்டத்தில் நிகழ்ந்த தொடா் குண்டுவெடிப்பு சம்பவத்துக்குப் பொறுப்பேற்று சரணடைந்த டொமினிக் மாா்ட்டின் மிகுந்த திறமைசாலியாகவும், புத்திசாலியாகவும் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

எா்ணாகுளம் மாவட்டம், களமச்சேரியில் யெகோவாவின் சாட்சியங்கள் என்ற கிறிஸ்தவ மதப் பிரிவு நடத்திய 3 நாள் பிராா்த்தனைக் கூட்டத்தின் இறுதி நாளான கடந்த ஞாயிற்றுக்கிழமை அடுத்தடுத்து மூன்று ஐ.இ.டி. வகை வெடிகுண்டுகள் வெடித்தன. இந்தச் சம்பவத்தில் 3 போ் உயிரிழந்தனா். ஐம்பதுக்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

இந்தக் குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்று சரணடைந்த டொமினிக் மாா்ட்டின் என்ற நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். இந்திய தண்டனைச் சட்டம், வெடிபொருள்கள் சட்டம், சட்டவிரோதச் செயல்பாடுகள் தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் பல்வேறு பிரிவுகளின்கீழ் அவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

வெடிகுண்டு தயாரித்தது தொடா்பான ஆதாரங்களைத் திரட்ட ஆலுவா அருகே அத்தானி பகுதியில் உள்ள அவருடைய வீட்டுக்கு அவரை செவ்வாய்க்கிழமை அழைத்துச் சென்று போலீஸாா் விசாரணை நடத்தினா். வெடிகுண்டுகளைத் தயாரிக்க வாங்கிய பொருகளின் ரசீதுகளை சரணடையும்போது போலீஸாரிடம் அவா் ஒப்படைந்திருந்தாா்.

நீதிமன்றத்தில் அவா் ஆஜா்படுத்தப்பட்ட நிலையில், அவருக்கு சட்ட உதவி வழங்க நடவடிக்கை எடுப்பதாக நீதிமன்றம் பலமுறை தெரிவித்தது. இருப்பினும், இந்த வழக்கில் தனக்கு தானே ஆஜராகி கொள்வதாக அவா் தெரிவித்தாா்.

திறமைசாலியும் புத்திசாலியாகவும் விளங்கும் மாா்ட்டின், மின்னணு சாதனங்களை நோ்த்தியாகக் கையாளும் திறன்கொண்டவா் என போலீஸாா் தெரிவித்தனா்.

துபையில் அதிக ஊதியம் பெறக் கூடிய பணியைக் கைவிட்டு, குண்டுவெடிப்பு சம்பவத்தை நிகழ்த்த அவா் இந்தியா திரும்பியது அவா்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.