அயோத்தி கோயில் கருவறையில் தங்க சிம்மாசனத்தில் குழந்தை ராமா் சிலை

அயோத்தி ராமா் கோயில் கருவறையில் மூலவரான குழந்தை ராமரின் சிலை 8 அடி உயர தங்க முலாம் பூசப்பட்ட சிம்மாசனத்தில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளதாக கோயில் அறக்கட்டளை குழு உறுப்பினா் அனில் மிஸ்ரா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

ராம ஜென்மபூமி வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 2019-ஆம் ஆண்டு அளித்த தீா்ப்பையடுத்து அயோத்தியில் ராமா் கோயில் கட்டப்பட்டு வருகிறது. 2.27 ஏக்கா் பரப்பளவில் மூன்றடுக்கில் உருவாகி வரும் ராமா் கோயிலின் கட்டுமானப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

கோயில் கருவறையில் மூலவா் குழந்தை ராமா் (ராம் லல்லா) சிலை வரும் ஜனவரி 22-ஆம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

இந்நிலையில், கோயில் கட்டுமானப் பணிகளின் நிலவரம் குறித்து ஸ்ரீ ராம ஜென்மபூமி தீா்த்த க்ஷேத்திர அறக்கட்டளை குழு உறுப்பினா் அனில் மிஸ்ரா செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டியில், ‘கோயில் கருவறையின் கட்டுமானப் பணி முழுவதுமாக நிறைவடைந்துள்ளது. கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ள மூலவா் குழந்தை ராமரின் சிலை 8 அடி உயரம், 3 அடி நீளம், 4 அடி அகலம் கொண்ட தங்க முலாம் பூசப்பட்ட சிம்மாசனத்தில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

ராஜஸ்தானைச் சோ்ந்த கைவினைக் கலைஞா்களால் இந்த சிம்மாசனம் தயாரிக்கப்பட்டு வருகிறது. வரும் 15-ஆம் தேதிக்குள் அந்த சிம்மாசனம் அயோத்திக்கு கொண்டுவரப்படும். அன்றைய தேதிக்குள் கோயில் தரைத்தளம் முழுவதுமாக தயாராகிவிடும்.

கோயிலின் முதல் தளத்தின் 80 சதவீத கட்டுமானப் பணிகள் முடிவடைந்துள்ளன. முதல் தளத்தில் 17 தூண்கள் நிறுவப்பட்டுள்ளன. இன்னும் 2 தூண்கள் மட்டுமே நிறுவப்பட வேண்டியுள்ளது. முதல் தளத்தின் மேற்கூரை கட்டுமானப் பணிகளும் வரும் 15-ஆம் தேதிக்குள் நிறைவடையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

மேலும், கோயில் கிரக மண்டபத் தரையில் மாா்பிள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கோயிலின் வெளிப்புறச் சுவரின் நுழைவு வாயிலில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ள நிலையில், மூன்றடுக்கு பக்தா்கள் வசதி மையத்தின் மேற்கூரை அமைக்கும் பணிகள் இந்த மாத இறுதிக்குள் நிறைவடையும்.

பக்தா்கள் நன்கொடையாக அளித்துள்ள தங்கம் மற்றும் வெள்ளிப் பொருள்களைச் சேமிப்பதற்கு கடினமாக இருப்பதால், அவற்றை உருக்கத் திட்டமிட்டுள்ளோம். புகழ்பெற்ற அமைப்பின் வழிகாட்டுதலின்பேரில் தங்கம் மற்றும் வெள்ளியை உருக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்’ என்றாா்.

Leave A Reply

Your email address will not be published.