வீட்டில் தனியாக இருந்த பெண் அரசு அதிகாரி கத்தியால் குத்தி கொடூர கொலை..!

கர்நாடக மாநிலத்தின் சுரங்கம் மற்றும் புவியியல் துறையின் இணை இயக்குநராக இருந்தவர் பிரத்திமா. நவம்பர் 4-ஆம் தேதி இரவு கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டதுதான் குளிர் நிரம்பிய பெங்களூரு மாநகரத்தை வெப்பத்தில் தகிக்க வைத்திருக்கிறது. சுரங்கத்துறையில் நேர்மையாகவும், துணிச்சலுடன் செயல்பட்டவரான பிரத்திமாவின் மரணம், பெங்களூருவையும் தாண்டி அதிகாரிகள் மட்டத்தில் அச்சமூட்டும் ஒன்றானது. ஷிவ்மோகா மாவட்டத்தின் துடுகி கிராமத்தைச் சேர்ந்த பிரத்திமாவுக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக, கணவரிடம் இருந்து பிரிந்து தொட்டஹள்ளச்சந்திரா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில் தான், சனிக்கிழமை இரவிலிருந்து அவரை செல்போனில் தொடர்பு கொண்டும் பிரத்திமாவிடம் இருந்து எந்த பதிலும் வராததால், அவரை நேரில் பார்க்க சென்றார் அவரது அண்ணன் பிரதீஷ். ஆனால், அங்கு ரத்த வெள்ளத்தில் பிரத்திமா கிடந்தது கண்டு அதிர்ந்து போய்விட்டார் பிரதீஷ்.சம்பவ இடத்துக்கு வந்த சுப்ரமண்யபுரா காவல்நிலைய போலீசார், உடலை கைப்பற்றினர். தடயவியல் துறையினர் உதவியுடன் ஆதாரங்களை சேகரித்தனர். அப்போது, அவரது செல்போன் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டது.

கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா விசாரணைக்கு உத்தரவிட, குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது. சந்தேகத்தின் பேரில், பிரத்திமாவை வீட்டில் விட்டுச் சென்ற ஓட்டுநரை விசாரித்த போலீசார், இரு தினங்களுக்கு முன்பு புதிதாக பணியில் சேர்ந்தவர் என்பதையும், அதற்கு முன்பு ஓட்டுநராக இருந்த கிரண் பணிநீக்கம் செய்யப்பட்டதையும் அறிந்தனர். இதனால் போலீசாருக்கு லேசாக பொறி தட்டியது. உடனே அவரை பிடிக்க முயன்றனர். ஆனால் கிரண் தலைமறைவாகிவிட்டார்.

தீவிர தேடுதலுக்கு பிறகு சாம்ராஜ்நகர் மாவட்டம் மாதேஸ்வரன் கோயிலில் பதுங்கியிருந்த கிரணை கைது செய்து விசாரித்த போது, கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். 8 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநராக இருந்த கிரண் செய்த மோசடிகள் பிரத்திமாவுக்கு தெரியவந்துள்ளது. சுரங்கத்துறையில் நேர்மை அதிகாரி என பெயரெடுத்த பிரத்திமா, எங்கு ரெய்டுக்கு சென்றாலும், அதனை முன் கூட்டியே சம்மந்தப்பட்ட கும்பலுக்கு தெரிவித்துள்ளார் கிரண்.

பல நாள் திருடன் ஒரு நாள் மாட்டுவான் என்பதை போல, இந்த உண்மை பிரத்திமாவுக்கு தெரியவந்ததும், அவரை வேலையை விட்டு நீக்கியுள்ளார். எவ்வளவோ கெஞ்சியும், மீண்டும் வேலையில் சேர்த்துக்கொள்ளாததால், கடும் பணக் கஷ்டத்தில் சிக்கியுள்ளார் கிரண். இதனை அடுத்தே, சனிக்கிழமை இரவு பிரத்திமாவை வீட்டில் சந்தித்து பேச அங்கு சென்றுள்ளார் கிரண். பிரத்திமா எப்போது வருவார் என்பதெல்லாம் முன்பே தெரியும் என்பதால், காத்திருந்த கிரண், பிரத்திமாவை சந்தித்து வேலைக்கேட்டுள்ளார். ஆனால், அவர் சம்மதிக்காததால் அவரை கொலை செய்ய திட்டமிட்டு சமையலறையில் இருந்த கத்தியால் கழுத்தை அறுத்து கொடூரமாக கொன்றுவிட்டு தப்பியுள்ளார்.

கொள்ளை சம்பவம் நடந்தது போன்று உடலை தரையில் அங்கும் இங்கும் இழுத்தும் , பொருட்களை கலைத்துப் போட்டும் நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். அந்த அடுக்குமாடி குடியிருப்பில் சிசிடிவி இல்லை என்பதுதான் அவர் தப்பிக்க முக்கிய காரணமாகிவிட்டது. எனினும், கொலை நடந்த 24 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்திருக்கின்றனர் காவல்துறையினர். வேலையில் சேர்த்துக்கொள்ளவில்லை என்பது மட்டும்தான் கொலைக்காண காரணமா? அல்லது இதன் பின்னால் மாஃபியா கும்பல் இருக்கிறதா என்கிற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.