அரசியல் தீர்வு வழங்கி வடக்கை அபிவிருத்தி செய்யவுள்ளோம்! – ஜனாதிபதி ரணில் உறுதி

“காஸா பிரச்சினைக்கு அரசியல் தீர்வு இல்லாமையே காரணமாகும். அதனால் அங்கு அரசியல் தீர்வொன்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இலங்கையிலும் வடக்குக்கு அரசியல் தீர்வு வழங்கி வடக்கை அபிவிருத்தி செய்யவுள்ளோம்.”

– இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (23) நடைபெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுகளுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான குழு நிலை விவாதத்தில் ரவூப் ஹக்கீம் எம்.பி. காஸா தொடர்பாக ஆற்றிய உரைக்குப் பதிலளிக்கையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாங்கள் தொழில் நிமித்தம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு எமது தொழிலாளர்களை நீண்ட காலமாக அனுப்பி வருகின்றோம்.

அதன் பிரகாரம் தொழில் அமைச்சர் அடுத்த கட்டமாக இஸ்ரேலுக்குத் தொழிலுக்கு அனுப்ப ஒப்பந்தம் செய்திருக்கின்றார். இஸ்ரேலுக்குத் தொழிலுக்குச் செல்ல தற்போது 10 ஆயிரம் பேர் தயாராக இருக்கின்றார்கள் என நான் நினைக்கவில்லை.

யுத்தம் இடம்பெறும் நாட்டுக்குச் செல்ல யாரும் விரும்பமாட்டார்கள். எனினும், தற்போதைய நிலையில் இஸ்ரேலுக்குச் செல்வது எந்தளவு பொருத்தம் எனத் தெரியாது. இது தொடர்பாக நான் தொழில் அமைச்சரிடம் வினவுகின்றேன்.

அத்துடன் எமது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. காஸா மீது இஸ்ரேலின் தாக்குதலை நாங்கள் வன்மையாகக் கண்டித்திருக்கின்றோம்.

இஸ்ரேல் மீது ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதலையும் நாங்கள் கண்டித்திருந்தோம். இதற்குத் தீர்வு காஸா மீது தாக்குதல் மேற்கொள்வதல்ல.

பலஸ்தீன அதிகார சபை ஊடாக இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணுவது தொடர்பாக பலரும் கதைத்து வருகின்றனர். அமெரிக்காவும் பேசி இருந்தது. அதகார சபை ஊடாகத் தீர்வு காண முடியும் என நான் நினைக்கவில்லை.

அரசியல் தீர்வு இல்லாமையே இதற்குக் காரணமாகும். அதனால் அரசியல் தீர்வொன்றை வழங்குவதன் மூலமே அந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்று நாங்கள் நினைக்கின்றோம்.

அத்துடன் இலங்கையிலும் நாங்கள் வடக்குக்கு அரசியல் தீர்வு வழங்கி வடக்கை அபிவிருத்தி செய்யவுள்ளோம். ஏனெனில் வடக்கில் சிறந்த பொருளாதாரம் இருக்கின்றது. குறிப்பாக பசுமைப் பொருளாதாரம், எரிசக்தி தொடர்பான பொருளாதாரம் போன்ற பல வளங்கள் அங்கு இருக்கின்றன.

அதனால் அடுத்த தசாப்தத்தில் வடக்கில் பலமான பொருளாதாரத்தை உருவாக்குவதே எமது இலக்காகும்.

எனவே, காஸா தொடர்பில் எமது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. அது தொடர்பாக ரவூப் ஹக்கீம் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.