கிளிநொச்சியில் மாவீரர் நினைவேந்தலுக்கு எதிரான ஏழு வழக்குகளும் தள்ளுபடி!

மாவீரர் தின நினைவேந்தலைத் தடை செய்யுமாறு கோரி கிளிநொச்சி மாவட்டத்தின் 7 பொலிஸ் நிலையங்களாலும் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்குகள் இன்று கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.

குற்றவியல் சட்டத்தின் 106இன் கீழ் மாவீரர் நிகழ்வுகளைத் தடை செய்யுமாறு கோரி கிளிநொச்சியில் இருக்கும் 7 பொலிஸ் நிலையங்களும் தனித்தனியே வழக்கைத் தாக்கல் செய்திருந்தன. இந்த வழக்குகள் இன்று முற்பகல் 11 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதில் ஏழு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளும் முன்னிலையாகினர்.

இந்த வழக்குக்கு எதிராக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சட்டத்தரணி கேசவன் சயந்தன் ஆகியோர் முன்னிலையாகி தமது வாதங்களை முன்வைத்தனர்.

இதன்போது, “நினைவுகூரல் என்பது அடிப்படை உரிமை. அதனை மறுக்க முடியாது. அதேநேரம் குற்றவியல் சட்டத்தின் 106 என்பது பொதுத் தொல்லை விதித்தல் என்பதாகும். அதன் கீழ் நினைவு நிகழ்வுக்குத் தடை விதிக்க முடியாது” – என்று ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியபோது அதனை மன்று ஏற்றுக்கொண்டது.

106 இன் கீழ் நினைவுகூரலைத் தடுக்க முடியாது எனக் கட்டளையிட்ட மன்ற, 7 வழக்குகளையும் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.

Leave A Reply

Your email address will not be published.