ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவதா? உரிய நேரத்தில் தீர்க்கமான முடிவு.

“நான் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதா? இல்லையா? என்பது தொடர்பில் உரிய நேரத்தில் தீர்க்கமான முடிவை எடுப்பேன். அது குறித்து இப்போது அவசரப்பட மாட்டேன்.”

இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

“ஜனாதிபதித் தேர்தலில் நான் போட்டியிவது தொடர்பில் விமல் வீரவன்ச தீர்மானிக்க முடியாது. அவரின் கருத்தைத் தூக்கி வீசுங்கள்” – என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆளும் கட்சியின் முக்கியஸ்தர்களுடன் நேற்றுமுன்தினம் (29.11.2023) நடத்திய கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனைக் கூறினார் என்று அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடமாட்டார் என்றும், ஏதேனும் சர்வதேச அமைப்பொன்றில் முக்கிய பதவியொன்றைப் பெற்று ஓய்வுகாலத்தைக் கழிக்கவே ரணில் விக்கிரமசிங்க முற்படுவார் என்றும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச கடந்த இரு நாட்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் உரையாற்றியிருந்தார்.

விமலின் இந்தக் கருத்து தொடர்பில் நேற்று ஆளும் கட்சியின் முக்கியஸ்தர்களுடன் ஜனாதிபதி நடத்திய கலந்துரையாடலின்போது பேசப்பட்டது. இதன்போதே ஜனாதிபதி மேற்படி பதிலை வழங்கினார் என்று அந்த அமைச்சர் கூறினார்.

“ஆளும் கட்சியிலிருந்து எதிரணிப் பக்கம் பாய்ந்தவர்களும், எதிர்க்கட்சிகளில் இருப்பவர்களும் எனது அரசியல் பயணத்தை ஏதோவொரு வழியில் முடக்க முயற்சிக்கின்றனர். அவர்களால் எனது அரசியல் பயணத்தை ஒருபோதும் முடக்க முடியாது. நீங்களும் (ஆளும் கட்சியின் முக்கியஸ்தார்கள்) அவர்களின் பொறிக்குள் சிக்கிவிடாதீர்கள். அரசியலில் நான் தொடர்ந்து இருப்பதா? இல்லையா? என நான்தான் முடிவு எடுப்பேன்.” – என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அந்தக் கலந்துரையாடலில் குறிப்பிட்டார் என்றும் அந்த அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.