MBBS பட்டம் பெற்ற சில மணி நேரத்திலேயே பாம்பு கடித்து மாணவர் மரணம்

இந்திய மாநிலமான கர்நாடகாவில் பட்டம் வாங்கிய சில மணி நேரங்களிலேயே பாம்பு கடித்து எம்.பி.பி.எஸ் மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவில் உள்ள துமகுருவின் புறநகரில் ஸ்ரீ சித்தார்த்தா மருத்துவக் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் கேரள மாநிலதில் உள்ள திருச்சூரைச் சேர்ந்த ஆதித் பாலகிருஷ்ணன் ( 21) என்பவர் எம்.பி.பி.எஸ் (MBBS ) படித்து வந்தார்.

இவர், கல்லூரி அருகிலேயே வாடகைக்கு வீடு எடுத்து படித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் மற்றும் கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா ஆகியோர் கலந்து கொண்டு பட்டம் வழங்கினர்.

அப்போது, மாணவர் ஆதித் பாலகிருஷ்ணன் பட்டம் வாங்கிய பின்னர் இரவு 11 மணிக்கு வீடு திரும்பியுள்ளார்.

அப்போது, வீட்டிற்கு சென்ற ஆதித் பாலகிருஷ்ணனை வாகனம் நிறுத்தும் இடத்தில் விஷ பாம்பு கண்டித்துள்ளது. அவரது வீட்டின் அருகில் இருந்த பூங்காவில் இருந்து பாம்பு வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஆனால், பாம்பு கடித்ததை உணராத ஆதித் பாலகிருஷ்ணன் வீட்டிற்குள் சென்றதும் சுருண்டு விழுந்துள்ளார். உடனே, அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டார்.

அப்போது, பட்டமளிப்பு விழாவை காண வந்த ஆதித் பாலகிருஷ்ணனின் தாய் மற்றும் உறவினர்கள் இதனை பார்த்ததும் கதறினர். இத்தாலியில் உள்ள அவரது தந்தைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஆதித் பாலகிருஷ்ணனுக்கு மேற்கொண்ட பிரேத பரிசோதனையில் ரத்த மாதிரிகளில் அதிக அளவு விஷம் கலந்திருப்பது தெரியவந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.