ஆசியாவில் கார் ஓட்ட உரிமம் பெற்ற கைகள் இல்லாத முதல் பெண்.

கேரளாவைச் சேர்ந்த இரண்டு கைகளும் இல்லாத ஜிலுமோள் என்ற பெண், ஆறு ஆண்டுகள் போராட்டத்திற்குப் பிறகு ஒருவழியாக வாகனம் ஓட்டுவதற்கான சான்றிதழ் பெற்றுள்ளார்.

“முடியாதது என இந்த உலகில் எதுவும் இல்லை என்பதை அனைவரும் உணரவேண்டும். எனக்கு கைகள் இல்லாவிட்டாலும் அதற்கு இணையாக வலிமையான கால்கள் உள்ளன,’’ என ஜிலுமோள் பெருமிதத்துடன் கூறுகிறார்.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள கரிமண்ணுார் நெல்லானிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜிலுமோள், 32. இரு கைகளும் இன்றி பிறந்திருந்தாலும் மன உறுதி படைத்த பெண்ணாக விளங்குகிறார் ஜிலுமோள். பெற்றோர், உறவினர் என யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல் சொந்தக் காலில் நின்று தன் வேலைகளைத் தானே செய்து கொள்கிறார்.

கார் ஓட்டவேண்டும் என்பது அவரது நெடுநாள் ஆசையாக இருந்து வந்த நிலையில், எர்ணாகுளத்தில் உள்ள பயிற்சிப் பள்ளியில் கார் ஓட்ட பயிற்சி செய்து வந்தார்.

இதனிடையே, தொடுபுழா ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் கார் உரிமைச் சான்றிதழ் பெற 2017ல் விண்ணப்பித்தபோது ஜிலுமோளுக்கு கைகள் இல்லாததால் கார் ஓட்டக்கூடாது எனக்கூறி நிராகரித்துவிட்டனர்.

இதனால் மிகவும் கவலையடைந்த ஜிலுமோள், கேரள உயர் நீதிமன்றத்தை அணுகிய நிலையில், அவருடைய விண்ணப்பத்தைப் பெற்று உடனடி நடவடிக்கை எடுக்குமாறு மோட்டார் வாகனத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்தச் சூழலில், கால்களால் ஓட்டுவதற்கு வசதியாக காரை வடிவ மாற்றம் செய்யும்படி ஜிலுமோளிடம் மோட்டார் வாகனத் துறையினர் ஆலோசனை கூறினர்.

அவர்கள் கூறியபடி காரின் வடிவத்தை மாற்றிய போதும் கார் ஓட்டுவதற்கான உரிமச் சான்றிதழை வழங்க மறுத்துவிட்டனர்.

இதையடுத்து, இப்பிரச்சினையில் மாநில மாற்றுத் திறனாளி ஆணையம் தலையிட்டதைத் தொடர்ந்து ஜிலுமோளுக்கு கார் ஓட்டுவதற்கான அனுமதி வழங்கப்பட்டது.

“ஆசியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட கண்டங்களில் இதுபோன்று கார் ஓட்ட உரிமம் பெற்ற முதல் பெண் ஜிலுமோள்தான்,” என கேரள மாற்றுத் திறனாளி ஆணையர் பஞ்சாபகேசன் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.