சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடல்!

கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக, சென்னை விமான நிலையம் திங்கள்கிழமை (டிச.4) இரவு 11 மணி வரை தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஞாயிற்றுக்கிழமை காலை புயலாக வலுப்பெற்றது. ‘மிக்ஜம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள புயல் சென்னைக்கு தென் கிழக்கே சுமாா் 130 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘மிக்ஜம்’ புயல் காரணமாக சென்னையில் விடிய விடிய சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

மிக்ஜம் புயல் சென்னையில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.

சென்னை வேளச்சேரி பிரதான சாலையில் எரிவாயு நிரப்பும் கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

ஐந்து பர்லாங்க் சாலை சந்திப்பில் கட்டுமான பணிகளுக்காக தோண்டப்பட்ட குழியில் கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

கனமழை அதிகயளவில் பெய்து வருவதால் மீட்புப் பணியில் ஈடுபட முடியாமல் போலீசார் திணறினர்.

மீட்கப்பட்ட 3 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சூறாவளி கனமழைக்கு வேளச்சேரி ஏரி நிரம்பியதால் பல்லாவரத்தில் இருந்து துரைப்பாக்கம் செல்லும் சாலையில் ஏரி நீரும், மழைநீரும் சேர்ந்து சாலையில் 4 அடி வரை வெள்ளம் நீர் சூழ்ந்துள்ளதால், வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளது.

சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவமனையில் இடுப்பளவு மழைநீர் சூழ்ந்ததால் நோயாளிகள், உறவினர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், மீனம்பாக்கத்தில் 82 கி.மீ வேகத்தில் வீசும் எனவும், 50-60 கி.மீ வரையிலும், அவ்வப்போது 70 கி.மீ வரையும் தரைக்காற்று வீசும் என கணிக்கப்பட்ட நிலையில், அதைவிட அதிகமாக மீனம்பாக்கத்தில் 82 கி.மீ.வேகத்தில் காற்று வீசி வருகிறது. மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக இதுவரை 25 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

இதைத் தொடர்ந்து மிக்ஜம் புயல் திங்கள் முற்பகல் தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. மழை மற்றும் காற்று இரவு வரை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக,சென்னை விமான நிலையம் தற்காலிகமாக திங்கள்கிழமை (டிச.4) இரவு 11 மணி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலைய ஒடுபாதையில் தண்ணீர் தேங்கி நிற்பதால், விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.