பொலிஸாரின் வெறியாட்டத்துக்கு முடிவுகட்ட அணிதிரள்வோம்! – கஜேந்திரன் சூளுரை.

“தமிழ் மக்களுடைய அடிப்படை உரிமைகளை மறுப்பதும், தமிழ் மக்களுக்கு எதிராகக் காட்டுச் சட்டங்களைப் பயன்படுத்துவதும், தமிழர்கள் மீது ஈவிரக்கம் இல்லாத தாக்குதல்கள், சித்திரவதைகளை நடத்துவதும் பொலிஸாரின் வழமையான நடவடிக்கையாக இருக்கின்றது. ஆகவே, பொலிஸாரின் இவ்வாறான செயற்பாடுகளை நாங்கள் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.”

இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டைப் பொலிஸாரின் கொடூர சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்தார் எனக் கூறப்படும் நாகராசா அலெக்ஸ் என்ற இளைஞருக்கு நீதி கோரி வட்டுக்கோட்டைச் சந்தியில் நேற்று (03) முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

“அண்மையில் வட்டுக்கோட்டைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அலெக்ஸ் என்ற இளைஞர் மிகக் கொடூரமான முறையிலே சித்திரவதை செய்யப்பட்டு அடித்துப் படுகொலை செய்யப்பட்டிருக்கின்ற சம்பவத்தை நாங்கள் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

உயிரிழந்த இந்த இளைஞரும் அவரது குடும்பத்தவர்களும் சமூகத்திலே மிக மதிப்போடு வாழ்ந்து வந்தவர்கள். ஆனால், பொலிஸார் சமூகத்திலே தாங்கள் செய்கின்ற சமூக விரோதச் செயற்பாடுகளை மூடி மறைப்பதற்காக அப்பாவிகளைக் கைது செய்து அவர்கள் மீது பொய்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி சித்திரவதை செய்து கொலை செய்துவிட்டு அவர்கள் மீது அபாண்டமான பழிகளைச் சுமத்தி இருப்பதை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

இந்தச் சம்பவத்திலே சம்பந்தப்பட்ட பொலிஸார் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம்.

தமிழர் பிரதேசங்களில் தமிழ் மக்களுக்கு எதிரான இவ்வாறான செயற்பாடுகளில் பொலிஸார் தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டுதான் வருகின்றார்கள்.

குறிப்பாக யுத்தம் நடைபெற்ற காலங்களில் இருந்து இராணுவத்தோடு சேர்ந்து தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள், யுத்தக் குற்றங்கள், இனப்படுகொலைகள் போன்ற சம்பவங்களிலே இந்தப் பொலிஸாரும் சம்பந்தப்பட்டிருக்கின்றனர்.

இவ்வாறு தமிழ் மக்களுக்கு எதிரான பாரிய குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக இந்த நாட்டில் எந்தவிதமான நீதி விசாரணைகளும் நடத்தப்படவில்லை.

ஏனெனில் அவர்கள் யுத்தத்தின் இறுதியில் வெற்றி பெற்றிருக்கின்ற நிலைமையிலே தாங்கள் செய்த படுகொலை மனநிலையோடுதான் தொடர்ந்தும் பொலிஸ் என்ற கடமைக்குள் இருந்து கொண்டு வடக்கு – கிழக்கில் தங்கள் அராஜகத்தைப் புரிந்து வருகின்றார்கள்.

தமிழ் மக்களுடைய அடிப்படை உரிமைகளை மறுப்பதும், தமிழ் மக்களுக்கு எதிராகக் காட்டுச் சட்டங்களைப் பயன்படுத்துவதும், தமிழர்கள் மீது ஈவிரக்கம் இல்லாத தாக்குதல்கள், சித்திரவதைகளை நடத்துவதும் பொலிஸாரின் வழமையான நடவடிக்கையாக இருக்கின்றது.

ஆகவே, பொலிஸாரின் இவ்வாறான செயற்பாடுகளை நாங்கள் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம். யுத்த காலத்திலேயே இனப் படுகொலையோடு சேர்ந்து செயற்பட்ட பங்காளர்களான பொலிஸார் வடக்கு, கிழக்கிலே பல உயர் பதவிகளில் இருக்கின்றபோது அவர்களுக்கு கீழே செயற்படுகின்றவர்களும், புதிதாகச் சேர்ந்து கொள்பவர்களும் அது தமிழர்களாக இருந்தாலும் கூட அவர்களுடைய மேலதிகாரிகளின் மனநிலைக்கு உள்வாங்கப்பட்டு சாதாரண தமிழ் மக்களை மிகக் கொடூரமான முறையில் சித்திரவதை செய்கின்ற வக்கிர மனம் கொண்டவர்களாக மாற்றப்படுகின்றார்கள்.
.
ஆகவே இந்த முறைமை முற்றாக மாற்றப்பட வேண்டுமாக இருந்தால் எங்கள் மீது நடைபெற்ற இனப்படுகொலைக்கு முழுமையான சர்வதேச விசாரணை நடைபெற்று இராணுவத்தினர் மட்டுமல்ல இந்த இனப்படுகொலையோடு தொடர்பட்ட பொலிஸாரும் தண்டிக்கப்படுகின்றபோதுதான் பொலிஸார் மனிதர்களை நேசிக்கின்ற ஒரு சூழல் உருவாகும். இல்லையென்றால் மனிதர்களை வேட்டையாடுகின்ற இனவெறி பிடித்தவர்களாக அவர்கள் இருப்பார்கள்.

பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சிங்களவர்கள் உயர் பதவிகளில் இருக்கின்றதால் தமிழ் மக்களுக்கு எதிராகவும் முஸ்லிம் மக்களுக்கு எதிராகவும் இனவெறி மனப்பாங்கு கொண்டவர்களாகவும் மதவெறி மனப்பாங்கு கொண்டவர்களாகவும் பல இடங்களில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

இதேவேளை, கடந்த வாரம் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வுகளில் கூட அப்பாவிகளைக் கைது செய்து பொய்க் குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி மிக மிகக் கொடுரமான சட்டத்தின் கீழ் வழக்குகளைக் கூட பதிவு செய்திருக்கின்றார்கள்.

மிக மிகக் கொடூரமான சட்டத்தின் கீழ்தான் இவர்களுக்கு எதிரான வழக்குகளைப் பதிவு செய்திருக்கின்றார்கள். அதற்குப் பொலிஸாரின் இனவெறி மனநிலை மற்றும் வக்கிர மனநிலைதான் காரணமாக இருக்கின்றது.

ஆகவே, இதற்கு எதிராக நாங்கள் எல்லோரும் ஒன்றுதிரண்டு போராடினால் மட்டும்தான் அப்பாவிகளுடைய இருப்பையும் உயிர்களையும் பாதுகாக்கக் கூடியதாக இருக்கும். அதற்காக நாங்கள் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.