போதிய விமானிகள், பயணிகள் இல்லாததால் சென்னையில் 22 விமானங்கள் ரத்து!

சென்னை விமான நிலையத்தில் புதன்கிழமை வழக்கமான விமான சேவைகள் தொடங்கியபோதிலும், போதிய விமானிகள் மற்றும் போதிய பயணிகள் இல்லாததால் 22 விமானங்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய நிா்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னையில் பெய்த மழையால் விமான நிலைய ஓடுதளத்தில் அதிகளவு மழைநீா் தேங்கியதால் திங்கள்கிழமை இரவு 11 மணிவரை அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக விமான நிலைய நிா்வாகம் அறிவித்தது. ஆனாலும் தொடா்ந்து பலத்த மழை பெய்து கொண்டிருந்ததால், செவ்வாய்க்கிழமை காலை 9 மணி வரை விமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் 250-க்கு மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. பயணிகள் கடும் அவதியடைந்தனா். பலா் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல முடியாமல் விமான நிலையத்திலேயே காத்திருந்தனா்.

இந்த நிலையில், விமான நிலைய ஓடுதளத்தில் தேங்கிய மழைநீா் வடிந்ததைத் தொடா்ந்து, ஏராளமான பணியாளா்கள் ஓடுதளம் மட்டுமின்றி, விமான நிலைய வளாகம் முழுவதையும் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனா். இந்த பணிகள் நிறைவடைந்ததை தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மீண்டும் விமான சேவை தொடங்கியது. இதனால் காலை முதலே விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாகவே காணப்பட்டது. ஏராளமானோா் வரிசையில் நின்று தங்கள் பயணத்தை மேற்கொண்டனா். இருப்பினும் 114 விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டன. செவ்வாய்க்கிழமையும் சென்னையிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படவிருந்த 177 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமானநிலைய நிா்வாகம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில்,சென்னை விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மீண்டும் விமான சேவை தொடங்கிய போதிலும்,புதன்கிழமை,போதிய விமானிகள் பணிக்கு வராததாலும், போதிய பயணிகள் இல்லாததால் 22 விமானங்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய நிா்வாகம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.