தலையில் 18 ஆண்டுகளாக இருந்த தோட்டாவை நீக்கி மருத்துவர்கள் சாதனை

சுமார் 18 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு இளைஞரின் தலையை துளைத்துக் கொண்டு சென்ற 3 செ.மீ. அளவுள்ள தோட்டா அறுவைகிசிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது.

பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் இந்த அறுவைசிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர்.

29 வயதாகும் இளைஞர், தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தந்தையாக உள்ளார். காது கோளாதவர். இவரது மண்டை ஓட்டை துளைத்துக்கொண்டு சென்ற துப்பாக்கித் தோட்டாவால், இவர் கடுமையான தலைவலி மற்றும் காதிலிருந்து நீர் ஒழுகும் பிரச்னையால் அவதிப்பட்டுவந்துள்ளார்.

யேமனில் உள்ள ஒரு சின்ன கிராமத்தைச் சேர்ந்த இவர் தனது 6 சகோதரர்கள், 3 சகோதரிகளுடன் வசித்து வந்துள்ளார். பெற்றோர் விவசாயம் செய்து வந்துள்ளனர். ஒருநாள், அவர்கள் வாழ்ந்து வந்த பகுதியில் இரு தரப்பினருக்கு இடையே நடந்த சண்டையில் இவர் சிக்கிக் கொண்டார். எனது தலையில் துப்பாக்கிக் குண்டு துளைத்துவிட்டது. ரத்தம் கொட்டியது. உடனடியாக மருத்துவமனைக்குச் சென்றேன். அங்கு முதலுதவி மட்டுமே அளிக்கப்பட்டது. தலையில் சிக்கிய குண்டை எடுக்க எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை.

அவரது தலைக்குள் காதுக்கு அருகே துளைத்திருந்த தோட்டாவின் முனை, மண்டை ஓட்டுக்குள் சிக்கியிருந்தது. இதனால், கடுமையான தலைவலியுடன் அவர் அவதிப்பட்டு வந்துள்ளார். தலைக்குள் சீழ்பிடித்துக்கொண்டு கடும் சிரமங்களை அனுபவித்தார்.

18 ஆண்டு கால போராட்டம், பெங்களூருவில் இருக்கும் அவரது நண்பர்கள் மூலம் முடிவுக்கு வந்தது.

இந்தியா வந்த நபரை மருத்துவர்கள் பரிசோதித்தனர். ஆனால், இது சிக்கலா அறுவைசிகிச்சையாக இருக்கும் என்று மருத்துவர்கள் கூறினர். எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்து, துல்லியமாக தோட்டா இருக்கும் இடத்தை அறிந்துகொண்டனர். பெரும் சவாலாகவே இந்த அறுவைசிகிச்சை இருந்ததாக மருத்துவர்களும் கூறியுள்ளனர். எதிர்பார்த்ததைப் போல தோட்டாவை அகற்றிதும் கடுமையான ரத்தப்போக்கு ஏற்படாததே மிகப்பெரிய வெற்றியாகப் பார்க்கப்பட்டது.

அவர் தலையில் அறுவைசிகிச்சை செய்து துப்பாக்கித் தோட்டா தலையிலிருந்து அகற்றப்பட்டுள்ளது. இதனால், கடுமையான வலியிலிருந்து விடுதலையானார். அவரது காதும் கேட்கத்தொடங்கியிருக்கிறது. காதிலிருந்து நீர் வடிவது நின்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.