எங்கள் மீது கல் வீசும் அனைவரையும் நாங்கள் கவனித்துக்கொள்கிறோம்… பசிலின் எச்சரிக்கை!

கற்களை எறிபவர்கள் அனைவரும் கவனிக்கப்படுவார்கள் என பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

“நீங்கள் எப்படி வந்தாலும் , அதற்கு நாங்களும் தயார். வீதியில் ஓடும் நாயின் மீது கல் அடித்தால், அது குரைத்துக் கொண்டு வேகமாக ஓடிவிடும். ஆனால், சிங்கத்தை கல்லால் அடித்தால், சிங்கம் திரும்பி, யார் கல்லை அடித்தது என்று பார்க்கும். நாம் அப்படித்தான். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் கூட. ”

“எங்களை வந்து கல்லால் அடிக்காதீர்கள். நாங்களும் பார்த்துக்கொள்கிறோம். ”

சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இன்று (15) இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தேசிய பொது மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனின் பணிப்புரைக்கு அமைய இந்த மாநாட்டுக்கு பாரிய பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. ஐக்கிய தேசியக் கட்சியின் பொது மாநாட்டில் அவ்வாறான உத்வேகம் இல்லாத காரணத்தினால் சுகததாச உள்ளக விளையாட்டரங்கிற்கு மிகவும் பிரயத்தனப்பட்டு குழுவினர் அழைத்து வரப்பட்டதாகத் தோன்றியது.

மேலும், இந்த மாநாட்டில் உரையாற்றிய பசில் ராஜபக்ஷ, மீள உருவாக்கப்படும் பொதுஜன பெரமுன அரசாங்கம் இப்படி ஒரு தொய்வாக இருக்காது, துடிப்பான அரசாங்கமாக இருக்கும் என்றார்.

ஒவ்வோரு கிராமம் , நகரம் என எங்கு சென்று மேலே பார்த்தாலும், கீழே பார்த்தாலும், பூமிக்கு அடியில் பார்த்தாலும், மஹிந்த ராஜபக்ஷ செய்ததைத்தான் பார்ப்பார்கள் என்றும், வேறு யாருக்கும் உரிமை வழங்க வேண்டாம் என்றும் பசில் ராஜபக்ச கட்சி உறுப்பினர்களிடம் கேட்டுக்கொண்டார்.

அத்துடன் மகிந்த ராஜபக்ச ஒழுக்கமான கட்சியை கட்டியெழுப்பியதுடன், கட்சி உறுப்பினர்களை முடிந்தவரை ஒழுக்கமாக நடந்து கொள்ளுமாறு கூறிய பசில், இதனை கோழைத்தனமாக கருத வேண்டாம் எனவும் ஏனைய கட்சிகளுக்கு அறிவித்துள்ளார்.

பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் கொழும்புக்கு வந்த கிராம மக்கள் குழுக்களை பாதுகாப்பாக வீடுகளுக்கு அனுப்ப பாதுகாப்பு தரப்பினருடன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கிராமத்திற்குச் சென்ற தேசிய அமைப்பாளர் மஞ்சள் கோடு வழியாக தவிர , வேறு இடங்களால் வீதியைக் கூட கடக்க வேண்டாம் என்று கூறியதுடன், சமூக ஊடகங்கள் மொட்டு கட்சியினர் தவறு செய்யும்வரை காத்திருக்கின்றன என்றார் அவர்.

Leave A Reply

Your email address will not be published.