மட்டக்களப்பு மாநகர சபையின் டெங்கு நோய் தடுப்பு செயலணியின் மாதாந்த மீளாய்வுக் கூட்டம்

மட்டக்களப்பு மாநகர சபையின் டெங்கு நோய் தடுப்பு செயலணியின் மாதாந்த மீளாய்வுக் கூட்டமானது மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் நகர மண்டபத்தில் இடம்பெற்றது.

இக் கூட்டத்தில் சுகாதார வைத்திய அதிகாரி Dr.கிரிசுதன், மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் கா.சித்திரவேல், பிரதி ஆணையாளர் உ.சிவராஜா, மண்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர் திருமதி பிரஷாந்தினி, சுகாதார நிலையியற் குழுவின் தலைவர் சிவம் பாக்கியநாதன், பொலிஸ் திணைக்களத்தின் சுற்று சூழல் பாதுகாப்பு பிரிவினர், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் வீதி அபிவிருத்தி திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மட்டக்களப்பு மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குள் கடந்த பெப்ரவரி மாதம் தொடக்கம் டெங்கு நோயின் தாக்கம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் இதே நிலையை தொடர்ந்தும் பேணுவதற்கு மழை காலத்துக்கு முன்னரே துப்பரவு பணிகளை முடிவுறுத்த வேண்டியுள்ளதாகவும் சுகாதார வைத்திய அதிகாரி Dr.கிரிசுதன் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக டெங்கு அதிகமாக பெருகும் என அடையாளம் காணப்பட்டுள்ள புளியந்தீவு தெற்கு, கருவேப்பங்கேணி, கல்லடி, கல்லடி வேலூர், பெரிய உப்போடை போன்ற இடங்களில் விசேட செயற்றிட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.

இதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த மாநகர முதல்வர் மட்டக்களப்பு மாநகருக்குள் கழிவகற்றல் செயற்பாடுகளை முகாமை செய்வதென்பது பெரும் சிரமமாக காணப்படுகின்றது. படித்தவர்களிலிருந்து பாமர மக்கள் வரை கழிவகற்றல் விடயத்தில் சரியான வளிமுறைகளை பின்பற்றுவதில்லை. வீதிகளிலும், வடிகான்களுக்குள்ளும் வீசி விட்டே செல்கிறார்கள். இதற்காகவே கண்காணிப்பு காமராக்களை நிறுவி வருகிறோம். இதன் ஊடாக பலர் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்பட்டு வருகிறார்கள்.

அத்துடன் மாநகர சபை கட்டளை சட்டத்தின்படி பராமரிக்கப்படாத காணிகளை சபையினால் சுவீகரிக்க முடியும். இதன்படி தற்போது பராமரிக்கப்படாத வெற்றுக் காணிகளுக்குள் எச்சரிக்கை பதாதைகளை காட்சிப்படுத்தியுள்ளோம். இதன் பிறகும் அவர்கள் குறித்த காணிகளை சுத்தப்படுத்தவில்லையாயின் அக்காணிகளை மாநகர சபை சுவிகரிக்கும்.

மேலும் தற்போது மழையுடன் கூடிய காலநிலை நிலவுவதன் காரணத்தினால் மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பிரதேசத்தில் காணப்படும் வடிகான்கள் மற்றும் நீர் தேங்கும் இடங்களை சம்மந்தப்பட்ட திணைக்களங்கள் உடனடியாக சுத்தப்படுத்த வேண்டும். அத்துடன் மாநகர சபையினால் தோணாக்கள் மற்றும் வடிகான்களை துப்பரவு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகளை துரித்தப்படுத்துமாறும் பணிப்புரை விடுத்தார்.

Sathasivam Nirojan

Leave A Reply

Your email address will not be published.