வானிலை ஆய்வில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்த இந்தியா ஆர்வம்!

ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது இன்றைக்கு பல துறைகளில் கால் பதிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக தகவல் தொழில்நுட்ப துறைகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பெருமளவில் கை கொடுக்கத் தொடங்கியுள்ள நிலையில், அந்த நிறுவனங்கள் பணியாளர்களின் எண்ணிக்கையை குறைக்கத் தொடங்கியுள்ளன.

அதே சமயம், உலகெங்கிலும் உள்ள அரசுகளும் கூட நிர்வாகப் பணிகள் மற்றும் இதர நடவடிக்கைகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கொள்ள முனைப்புக் காட்டி வருகின்றன. இந்தியாவைப் பொருத்தவரையில் தொடர் மழை, புயல், வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை பேரிடர்களை மிக துல்லியமாகக் கணிப்பது சவால் மிகுந்த காரியமாக உள்ளது.

மேலும், புவி வெப்பமயமாக்கல் நடவடிக்கை காரணமாக கடந்த சில ஆண்டுகளாகவே பல ஏற்ற, இறக்கங்களைக் கொண்டதாக வானிலை இருக்கிறது. எதிர்பாராத இயற்கை பேரிடர்களால் இந்தியாவில் 2023ஆம் ஆண்டில் மட்டும் 3,000 மக்கள் பலியாகியுள்ளனர்.

இத்தகைய சூழ்நிலையில், வானிலை ஆய்வு மையங்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கு இந்திய அரசு ஆர்வம் காட்டி வருகிறது. இதன் மூலமாக ஆய்வுக்கு செலவிடப்படும் தொகை குறையும் என்றும், கணிப்புகளின் வேகம் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மையில் பிரிட்டனில் உள்ள வானிலை ஆய்வு மையமானது, கூகுள் நிறுவனத்தின் உதவியுடன், செயற்கை நுண்ணறிவை வானிலை ஆய்வுகளில் பயன்படுத்த தொடங்கியுள்ளது. இத்தகைய சூழலில், பரந்து விரிந்த பரப்பளவும், 140 கோடி மக்கள் தொகையும் கொண்ட இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு மூலமாக வானிலை கணிப்புகள் துல்லியமாக வெளிவந்தால் அது பெருமளவில் பலன் உள்ளதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

குறிப்பாக உலகின் மாபெரும் அரிசி, கோதுமை மற்றும் சர்க்கரை உற்பத்தியாளராக இந்தியா இருந்து வரும் நிலையில் மழை மற்றும் வறட்சி பாதிப்புகளில் இருந்து பயிர்களை காப்பதற்கு வானிலை ஆய்வுகள் மிக துல்லியமாக இருக்க வேண்டிய தேவை இருக்கிறது.

தற்போது சூப்பர் கம்ப்யூட்டர்களின் உதவியுடன், கணக்கீடு முறைகளில் வானிலை முடிவுகளை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு வருகிறது. இந்தச் சூழலில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தினால் மிகக் குறைந்த செலவில் தரமான வகையில் ஆய்வு முடிவுகளை வெளியிட முடியும் என்று கருதப்படுகிறது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் பருவநிலை ஆராய்ச்சி மற்றும் சேவைகள் பிரிவின் தலைவர் கே.எஸ்.ஹோஸாலிக்கர் கூறுகையில், “வானிலை ஆய்வு முடிவுகளை மேம்படுத்துவதில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பெரும் உதவியாக இருக்கும் எனக் கருதுகிறோம்’’ என்றார்.

வெப்ப அலைகள், மலேரியா பாதிப்பு உள்ளிட்டவை குறித்து பொதுமக்களுக்கான எச்சரிக்கைகளை செய்யவும், தனியொரு கிராம அளவிலான கணிப்புகளை வெளியிடவும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உதவியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.