தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கும் தேர்தல் நடக்கவே சாத்தியம்! – இதிலும் கட்சியின் மரபு மாறுவதற்கு வாய்ப்பு.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் தேர்தல் மூலமே தெரிவாக வாய்ப்புள்ளதாக அந்தக் கட்சியின் உயர் வட்டாரங்கள் மூலம் அறியவருகின்றது. அத்துடன், பொதுச்செயலாளர் பதவிக்கு வடக்கு, கிழக்கைச் சேர்ந்த 6 பேர் போட்டியிடத் தயாராகி வருகின்றனர் என்றும் தெரியவருகின்றது.

இதன் மூலம், தேர்தல் இன்றியே இதுவரை காலமும் பொதுச்செயலாளர் தெரிவு செய்யப்பட்டு வந்த சம்பிரதாயமும் மாற்றமடையலாம். அத்துடன், தலைவர் பதவியை வடக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர் வகித்தால் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவருக்குப் பொதுச்செயலாளர் என்ற மரபும் மாற்றமடைய சந்தர்ப்பம் உள்ளது.

அண்மையில், தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்கும் மரபை மாற்றி தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த சிவஞானம் சிறீதரன் வெற்றி பெற்று தலைவராக உள்ளார். இந்தநிலையில், பொதுச்செயலாளர் பதவிக்கும் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர் தேர்தல் மூலம் தெரிவானால் 75 ஆண்டுகள் வரலாற்று பாரம்பரியம் கொண்ட அந்தக் கட்சியின் மரபு மாற்றமடையலாம்.

இதேநேரம், தமிழரசுக் கட்சியின் தலைவர் தேர்தலில் சிறீதரனின் வெற்றிக்காக உழைத்தவர்கள் மட்டக்களப்பைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசனை முன்மொழிந்துள்ளனர். எனினும், பொதுச்செயலாளர் பதவிக்கு கிழக்கு மாகாணத்தை சேர்ந்த கி.துரைராஜசிங்கம், வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த சேவியர் குலநாயகம் ஆகியோரும் போட்டியிடத் தயாராகி வருகின்றனர்.

எனினும், பொதுச்செயலாளர் பதவி தொடர்பில் எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள மத்திய குழுக் கூட்டத்திலேயே தீர்மானிக்கப்படும் என்பது நினைவில்கொள்ளத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.