நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளால் ஜனாதிபதியை நியமிப்பதற்கு ரணில் முயற்சி.

நிறைவேற்று ஜனாதிபதிப் பதவியை இல்லாதொழித்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளால் ஜனாதிபதியை நியமிக்க தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முயற்சித்து வருகின்றார் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றஞ்சாட்டினார்.

வத்தளையில் (10) சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ராஜபக்ஷக்கள், யுத்த வெற்றியை முதன்மையாகக் கொண்டு நாட்டின் உரிமையை எழுதி எடுத்தது போல் வெட்கமின்றி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை எழுதி எடுத்துக்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கத் தயாராகி வருகின்றார் என்று அவருக்கு நெருங்கிய பத்திரிகைகள் ஊடாக பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றார்.

ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலயே நாமும் இருக்கின்றோம். என்றாலும் நாட்டு மக்களின் வாக்குரிமை பாதுகாக்கப்பட்டே அதனை இல்லாதொழிக்க வேண்டும். பொதுத்தேர்தலில் மக்கள் வாக்களிக்கும் உரிமை பாதுகாக்கப்பட்டே நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டும். இதுவரை போதிய காலம் காணப்பட்டது. வேண்டிய வாக்குகள் காணப்பட்டண. ஜனாதிபதியாகுவதற்கான ஆசனங்கள் காணப்பட்டன.

ஜனாதிபதியைப் பெற்றுக்கொள்ள 134 ஆசனங்கள் இருந்தன. நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிக்க 150 ஆசனங்கள் காணப்பட்டன. நிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படும் என்றிருந்தால் மீதமுள்ள 16 பேரைக் கொடுத்திருப்போம்.

ஜனாதிபதித் தேர்தல் நடத்த வேண்டிய காலம் நெருங்கியுள்ள நேரத்தில் இவர்கள் இதனை ஒழிக்க முன்வந்துள்ளனர். நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டும் என்ற பெயரில் மக்கள் ஆணைக்கு முரணாக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது அரசியல் ஆயுள் காலத்தை நீடித்துக்கொள்ளத் தயாராகி வருகின்றார்.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டும் என்ற கொள்கையைக் கொண்ட கட்சியாக இந்நாட்டு மக்களின் வாக்களிக்கும் உரிமையை இல்லாது செய்யச் செயற்படும் கொடுங்கோல் ஆட்சிக்கு நாம் ஒரு தெளிவான எச்சரிக்கையை விடுக்கின்றோம். அதாவது திகதி நிர்ணயிக்கப்பட்டு ஜனாதிபதித் தேர்தல் விரைவாக நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்துகின்றது.

நிறைவேற்று ஜனாதிபதிப் பதவியை இல்லாதொழித்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளால் ஜனாதிபதியை நியமிக்க தற்போதைய ஜனாதிபதி முயற்சித்து வருகின்றார்.

ஐக்கிய மக்கள் சக்தி கூட நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரத்தில் திருத்தம் செய்வதற்கு அரசியல் கொள்கை ரீதியாக விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், புதிய மக்கள் ஆணையொன்றின் ஊடகவே இதனைச் செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளது. இவ்வாறு இல்லாமல் அவ்வாறானதொன்று இடம்பெறுவதற்கு இடமளிக்கமாட்டோம்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.