சுரேஷ் அங்காடி கொரோனா தாக்கத்தால் மரணம்

இந்திய ரயில்வே இணை அமைச்சரும் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவருமான சுரேஷ் அங்காடி (65) இன்று உயிரிழந்தார். டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் மருத்துவமனையில் (எய்ம்ஸ்) அவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் அவர் உயிரிழந்த தகவல் வெளிவந்துள்ளது.

சுரேஷ் அங்காடியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், கர்நாடகா மக்களுக்காக அயராது உழைத்தவர் அவர் என்று கூறியுள்ளார்.

அவரது மறைவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சுரேஷ் அங்காடி ஒரு விதிவிலக்கான காரியகார்த்தா, அவர் கர்நாடகாவில் கட்சியை பலப்படுத்த கடுமையாக உழைத்தார். அவர் அர்ப்பணிப்புள்ள எம்.பி ஆகவும் திறமையான அமைச்சராகவும் இருந்தார், அவரது மறைவு வருத்தமளிக்கிறது. இந்த சோகமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் உள்ளன என்று கூறியுள்ளார்.

கர்நாடகாவின் பெல்காம் தொகுதி கே.கே. கொப்பா பகுதியில் 1955ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதி பிறந்தார் சுரேஷ் அங்காடி. அதே தொகுதியில் இருந்து மக்களவைக்கு 2019இல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றார் சுரேஷ் அங்காடி. பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த அவர், பெல்காம் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியில் ஆரம்ப காலம் தொட்டு பணியாற்றினார்.

2004, 2009, 2014 ஆகிய ஆண்டுகளில் நடந்த மக்களவை தேர்தல்களில் தொடர்ச்சியாக பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு வென்ற அவர், கடந்த ஆண்டு நடந்த மக்களவை தேர்தலிலும் வென்று தொடர்ச்சியாக நான்காவது முறையாக வென்ற எம்.பிஆக விளங்கினார்.

கடந்த 11ஆம் தேதி கொரோனா தொற்றால் தான் பாதிக்கப்பட்ட தகவலை டிவிட்டர் பக்கம் வாயிலாக வெளியிட்ட சுரேஷ் அங்காடி, மருத்துவர்களின் அறிவுரைப்படி தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்திக் கொள்ளமாறும் கேட்டுக் கொண்டிருந்தார்.

வைரஸ் தொற்று அறிகுறி தீவிரமான நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு மனைவி, இரண்டு மகள்கள் உள்ளனர்.

4 எம்.பி.க்கள், 6 எம்எல்ஏக்கள் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவில் இதுவரை 4 எம்.பி.க்கள், 6 எம்எல்ஏக்கள் உயிரிழந்துள்ளனர்.

சுரேஷ் அங்காடிக்கு முன்னதாக, ஏற்கெனவே கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் அசோக் கஸ்தி (55) கடந்த 17ஆம் தேதி உயிரிழந்தார். அவருக்கு முன்னதாக வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த திருப்பதி தொகுதி எம்.பி துர்கா பிசாத் (66) சென்னை மருத்துவமனையில் உயிரிழந்தார்.

கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார், கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த மாதம் 28ஆம் தேதி உயிரிழந்தார்.

டெல்லி ராணுவ மருத்துவமனையில் கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு பெற்று வந்த இந்திய குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி கடந்த மாதம் 31ஆம் தேதி உயிரிழந்தார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரு சட்டமன்ற உறுப்பினர், மேற்கு வங்க மாநிலத்தில் இரு சட்டமன்ற உறுப்பினர்கள், உத்தர பிரதேசத்தில் இரு அமைச்சர்கள், தமிழ்நாட்டில் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜே. அன்பழகன் ஆகியோர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தனர்.

இந்தியாவில் செப்டம்பர் 23ஆம் தேதி இரவு 9.45 மணி நிலவரப்படி, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 56 லட்சத்து 46 ஆயிரத்து 10 ஆக உள்ளது என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் சேகரித்து வெளியிடும் தரவுகளில் கூறப்பட்டுள்ளது.

உலக அளவில் வைரஸ் பாதிப்பு 3 கோடியே 16 லட்சத்து 73 ஆயிரத்தை கடந்த நிலையில், அமெரிக்காவில் 69 லட்சத்து 2 ஆயிரத்து 930 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வைரஸ் உயிரிழப்புகள், 2 லட்சத்து ஓராயிரத்து 120 பேர் என அமெரிக்காவிலும், 1 லட்சத்து 38 ஆயிரத்து 105 பேர் என பிரேஸிலிலும், 90 ஆயிரத்து 20 பேர் என இந்தியாவிலும் பதிவாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.