எனக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்பட்டே தீரும்! – சபாநாயகர் சூளுரை.

“நாடாளுமன்றத்தில் எனக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டால் அது நீதியின் பக்கம் நிற்கும் எம்.பிக்களால் தோற்கடிக்கப்பட்டே தீரும்.”

இவ்வாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தமிழ் ஊடகமொன்றிடம் தெரிவித்தார்.

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. அந்தப் பிரேரணையில் கையொப்பம் திரட்டும் நடவடிக்கை நேற்று முதல் ஆரம்பமாகியுள்ளது.

நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தை நிறைவேற்றும்போது அது தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கிய திருத்தப் பரித்துரைகளை சபாநாயகர் சரியாக அமுல்படுத்தாமை, அரசமைப்பு, நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகள் மற்றும் நாடாளுமன்றச் சிறப்புரிமைகளை மீறியமை உள்ளிட்ட பல விடயங்களை அடிப்படையாகக்கொண்டே சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் சபாநாயகரிடம் தமிழ் ஊடகமொன்று வினவியபோது அவர் தெரிவித்ததாவது:-

“நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உயர் நீதிமன்றத்தின் கட்டளையைப் புறக்கணிக்கவில்லை, அரசமைப்பை மீறவில்லை, நாடாளுமன்றச் சிறப்புரிமைகளை மீறவில்லை.

அதனால் பொய்க் குற்றச்சாட்டுக்களுக்கு அஞ்சி என் பதவியை இராஜிநாமா செய்யமாட்டேன். எவருக்கும் பயந்து ஓடவும் மாட்டேன்.

நான் நாடாளுமன்றத்தில் நடுநிலையுடன் செயற்படுகின்றேன். எனவே, எனக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டால் அது நீதியின் பக்கம் நிற்கும் எம்.பிக்களால் தோற்கடிக்கப்பட்டே தீரும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.