வெடுக்குநாறிமலையில் கைதானவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு!

வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்டவர்களின் உணவு தவிர்ப்புப் போராட்டம் இன்று முடித்து வைக்கப்பட்டது.

வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் சிவராத்திரி வழிபாட்டில் ஈடுபட்டிருந்தபோது கடந்த 8 ஆம் திகதி நெடுங்கேணி பொலிஸாரால் ஆலயப் பூசகர் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்கள் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 5 பேர் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் உணவு தவிர்ப்பு ப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், வெடுக்குநாறிமலையில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரியும், பொலிஸ் அராஜகத்தைக் கண்டித்தும் வவுனியாவில் இன்று ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றிருந்தது.

ஆர்ப்பாட்டம் வவுனியா சிறைச்சாலை முன்றலில் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, வேலன் சுவாமி, அருட்தந்தை ரமேஸ், சட்டத்தரணி க.சுகாஸ், நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டர்களின் உறவினர்களுடன் கலந்துரையாடி அவர்களின் இணக்கத்துடன் சிறைச்சாலைக்குச் சென்று உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆலயப் பூசகர் மதிமுகராசா, எஸ்.தவபாலசிங்கம், கிந்துஜன், தமிழ்ச்செல்வன், விநாயகமூர்த்தி ஆகிய 5 பேருடனும் கலந்துரையாடி அவர்களுக்கு நீராகாரம் கொடுத்து உணவு தவிர்ப்புப் போராட்டத்தை நிறைவு செய்து வைத்தனர்.

இதன்போது, அவர்களின் விடுதலைக்காகத் தாம் வெளியில் ஒன்றுபட்டு தொடர் போராட்டங்களை முன்னெடுப்பதாக உணவு தவிர்ப்புப் போராட்டத்தை முடிந்து வைத்தவர்கள் உறுதிமொழி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.