துருக்கி கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில், 29 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில், 29 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

மத்திய கிழக்கு நாடான துருக்கியின் இஸ்தான்புல்லில், 16 மாடி கட்டடத்தில் இரவு நேர கேளிக்கை விடுதி இயங்கி வந்தது. தற்போது ரம்ஜான் விடுமுறைக்காக விடுதியை புதுப்பிக்கும் பணிகள் நடந்து வந்தன.

நேற்று மாலை பணிகள் நடைபெற்ற போது தீ விபத்து ஏற்பட்டது. தீ உடனடியாக கேளிக்கை விடுதி இருந்த தளம் முழுவதும் பரவியது. தீயணைப்பு வீரர்கள் பல மணிநேர போராட்டத்துக்கு பின் தீயை அணைத்தனர்.

இந்த விபத்தில் கட்டடத்தில் வேலை செய்த பணியாளர்கள், மேல் தளத்தில் இருந்தவர்கள் என, 29 பேர் தீயில் சிக்கி உயிரிழந்தனர். ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

தீ விபத்து தொடர்பாக கேளிக்கை விடுதியின் மேலாளர், பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்ட நிறுவனத்தின் மேற்பார்வையாளர் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பழுதுபார்ப்பு பணியின் போது மின்கசிவு ஏற்பட்டதால் தீ விபத்து நிகழ்ந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.