கென்யாவில் தொடர் மழையால் கடந்த 2 மாதங்களில் 181 பேர் பலி.

கென்யாவில் தொடர் பேய்மழையால் கடந்த 2 மாதங்களில் இதுவரை 181 பேர் பலியாகி உள்ளனர். இந்த வாரத்தில் மட்டும் 47 பேர் உயிரிழந்தனர். பலர் தங்களின் உடைமைகளை இழந்து முகாம்களில் தங்கி உள்ளனர்.

கடந்த மார்ச் முதல் கென்யாவில் பலகட்டமாக புயல் தாக்கியது. இதில் பலத்த மழை காரணமாக வீடுகள் மூழ்கின. நதிகள் நிரம்பி பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டது. பல பாலங்கள், சாலைகள் துண்டிக்கப்பட்டன . முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சக்கணக்கானோர் வீடுகளில் இருந்து வெளியேறி பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டனர். இதன் காரணமாக பெரும் அளவில் உயிர்ச்சேதத்தை தவிர்க்க முடிந்ததாக கென்யா தெற்கு பகுதி செஞ்சிலுவை சங்கத்தின் ரிஜினல் மேனேஜர் பிளிக்ஸ் மேயோ கூறினார்.

கென்யா தலைநகர் நைரோபியில் இருந்து 33 கிமீட்டர் தொலைவில் உள்ள கிட்டங்கலா , தெற்கு , மேற்கு கென்யாவில் மேய்ஹேய்யூ உள்ளிட்ட முக்கிய பகுதிகள் இந்த புயல் மழையால் பெரும் பாதிப்பை சந்தித்தன. நைரோபி மற்றும் முக்கிய நதிக்கரையோர மக்கள் 2 லட்சம் பேர் மாற்று இடம் பெயர்ந்துள்ளனர்.

மழை வெள்ளம், நிலச்சரிவு பாதிப்பில் சிக்கியவர்களை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. மாயமான பலரை தேடும் பணி நடப்பதாகவும், ராணுவத்தினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும்’ கென்யாவின் அதிபர் வில்லியம் புரூட்டோ கூறியுள்ளார்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இந்நாட்டு மக்கள் விரைவில் மீண்டு வர பிரார்த்திப்பதாக போப் கூறியுள்ளார். அமெரிக்காவும் இரங்கல் தெரிவித்துள்ளது.மேலும் முடிந்த அளவுக்கு அனைத்து உதவிகளும் அமெரிக்கா செய்யும் என அந்நாட்டு செய்தி தொடர்பாளர் ஹரின்ஜெயின் கூறியுள்ளார்.

மேலும் இன்னும் ஒரு வாரத்திற்கு கனத்த மழை இருப்பதாகவும், நிரம்பி வரும் அணைகளை 24 மணி நேரமும் கண்காணிக்க உஷார் படுத்தப்பட்டுள்ளதாகவும் கென்யா நாட்டு உள்துறை அமைச்சர் ஹித்துரே கிண்டிகி கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.