மிகவும் கடினமான சூழலில் இருக்கின்றார்கள் தமிழர்கள்! – யாழில் கூட்டமைப்பு எம்.பிக்களிடம் அமெரிக்கத் தூதுவர் தெரிவிப்பு.
மிகவும் கடினமான சூழலில் தற்போது நீங்கள் (தமிழர்கள்) உள்ளீர்கள் என்பதனை ஏற்கின்றோம் என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த அமெரிக்கத் தூதுவருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று (15) விசேட சந்திப்பு நடைபெற்றது. இதன்போதே அமெரிக்கத் தூதுவர் மேற்கண்டவாறு கூறினார்.
இந்தச் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், த.சித்தார்த்தன், இ.சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
மேற்படி சந்திப்பில் இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் விவகாரம் தொடர்பிலேயே அமெரிக்கத் தூதுவரால் அதிக அக்கறை செலுத்தப்பட்டது. அத்துடன் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய நிர்வாகத் தெரிவுக்கு எதிரான வழக்கு விடயம் குறித்தும் அமெரிக்கத் தூதுவர் வினவினார்.
குறித்த சந்திப்பில் பொது வேட்பாளர் விடயத்தில் கூட்டமைப்பின் சார்பில் கலந்துகொண்ட மூவரும் மூன்று நிலைப்பாடுகளில் காணப்பட்டனர்.
ஜனாதிபதித் தேர்தலில் முன்பு சரத் பொன்சேகா, மைத்திரிபால சிறிசேன, சஜித் பிரேமதாஸ என வாக்களித்து ஏமாற்றமே அடைந்தோம். அதனால் பொது வேட்பாளர் வேண்டும். இதனைத் தமிழ்க் கட்சிகளை ஒருங்கிணைக்கும் களமாகவும் பயன்படுத்தலாம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்தார். அதேநேரம், பொது வேட்பாளர் விடயம் பொருத்தமற்ற ஒன்று என்பதே தனது நிலைப்பாடு எனவும், இருப்பினும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் பிரஸ்தாபித்து ஓர் தீர்மானத்தை எட்ட முடியும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் இ.சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தபோதும் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் மௌனம் காத்தார்.
இதேநேரம், “நில விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடயம், பொறுப்புக்கூறல், மனித உரிமை போன்ற விடயங்களில் நாங்கள் பல விடயங்களை இலங்கை அரசிடம் சொன்னோம். அவர்கள் செய்வதாக இல்லை. மிகவும் கடினமான சூழலில் தற்போது நீங்கள் (தமிழர்கள்) உள்ளீர்கள் என்பதனை ஏற்கின்றோம். இருப்பினும் நாம் தொடரந்தும் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுப்போம்.” – என்று அமெரிக்கத் தூதுவர் பதிலளித்தார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய நிர்வாகத் தெரிவுக்கு எதிரான வழக்கு விடயம் குறித்து அமெரிக்கத் தூதுவர்
வினவியபோது, “அதனைத் தனிப்படப் பேசுவதே பொருத்தமானது.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் பதிலளித்தார்.