தமிழ்ப் பொது வேட்பாளர் முயற்சிக்கு கடைசி வரை இடமளியாதீர்! மாவைக்கு இன்றும் சம்பந்தன் அறிவுறுத்தல்; உறுதியாக எதிர்க்கும்படி அவர் வழிகாட்டல்.

“வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் தரப்பில் பொது வேட்பாளரை நிறுத்தும் திட்டம் தமிழினத்துக்குப் பேராபத்தான விடயம். அதற்கு எக்காரணம் கொண்டும் தமிழரசுக் கட்சி இணங்கவும் கூடாது; இடமளிக்கவும் கூடாது. அந்த முயற்சிக்குக் கடைசி வரை வாய்ப்பளிக்காதீர்கள். கட்சிக்குள் இது தொடர்பான விடயத்தை உறுதியாக எதிர்த்து நில்லுங்கள்.”

இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்குக் கட்சியின் பெருந்தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. இன்று காலையும் தொலைபேசி மூலம் அறிவுரையும் வழிகாட்டலும் வழங்கியிருக்கின்றார்.

மாவை சேனாதிராஜாவுடன் காலையில் தொலைபேசியில் பேசிய சம்பந்தன் எம்.பி., அதைத் தொடர்ந்து சுமந்திரன் எம்.பியைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அது குறித்து விவரித்தார்.

“மாவை சேனாதிராஜாவுடன் இன்று காலை மீண்டும் பேசியுள்ளேன். வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்தும் திட்டம் தமிழினத்துக்குப் பேராபத்தான விடயம். அதற்கு எக்காரணம் கொண்டும் தமிழரசுக் கட்சி இணங்கக் கூடாது, இடமளிக்கவும் கூடாது. கட்சிக்குள் இது தொடர்பான விடயத்தை உறுதியாக எதிர்த்து நில்லுங்கள் என்று அவருக்குக் கூறியுள்ளேன்.

சிறீதரன் எம்.பிக்கும், சுமந்திரன் எம்.பிக்கும் இது குறித்து நான் நேரில் விவரமாகத் தெரிவித்துள்ளேன் என்று மாவையிடம் சுட்டிக்காட்டினேன். சிறீதரன் தம்மை வந்து சந்தித்து அது பற்றி கூறினார் என்று மாவை சேனாதிராஜா எனக்குப் பதில் அளித்தார்” – என்று சுமந்திரனிடம் இன்று பகல் சம்பந்தன் தெரிவித்தார்.

“இது தொடர்பில் கட்சிக்குள் வேறு யாருடனும் நான் தொடர்பு கொண்டு பேச வேண்டும் என்று நீங்கள் கருதுகின்றீர்கள்?” – என்று சுமந்திரனிடம் சம்பந்தன் கேட்டார் எனவும் அறியவந்தது.

சம்பந்தனும் மாவை சேனாதிராஜாவும் பேசியவை பற்றிய மேல் விடயங்களை சம்பந்தனின் மகனும் சுமந்திரனுக்குத் தெரியப்படுத்தினார்.

தாம் வயோதிபத்தில் தளர்வுற்று இருந்தாலும் இந்த விடயத்தில் சம்பந்தன் ஒரு நிலைப்பாடு எடுத்து தீவிரமாகவும் உறுதியாகவும் உள்ளார் எனத் தெரிகின்றது.

Leave A Reply

Your email address will not be published.