சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பான துபாய் ஊடக விசாரணையில் சிங்கப்பூர் சந்தேக நபர்களின் பெயர்கள்.

துபாயில் அனைத்துலக ரீதியில் ‘துபாய் அன்லாக்டு’ என்ற ஊடக விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

இதில் சிங்கப்பூரில் ஆகப் பெரிய அளவில் கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பலரின் பெயர்களும் அடிபட்டுள்ளன.

பயங்கரவாதத்துக்கு நிதி திரட்டுவோர், போதைப் பொருள் கடத்தல் மன்னர்கள், தனது சொந்த நலனுக்காக நாட்டின் வளங்களைச் சுரண்டுவோர் ஆகியவர்களின் பெயர்கள் தெரிய வந்துள்ளன. இவர்களுக்கு நிகராக மேற்குறிப்பிட்ட சிங்கப்பூர் சந்தேக நபர்களின் பெயர்களும் அடிபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘துபாய் அன்லாக்டு’ என்ற அனைத்துலக ஊடக விசாரணை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், ‘அல் ஜசீரா’, ‘ஃபோர்ப்ஸ்’, ‘த சிட்னி மார்னிங் ஹெரால்ட்’ போன்ற உலக நாடுகளின் 70க்கும் மேற்பட்ட செய்தியாளர்களை உள்ளடக்கி செயல்பட்டது.

இந்த விசாரணை அமைப்பின் அறிக்கைகள் 2020ஆம் ஆண்டிலிருந்து 2022ஆம் ஆண்டுவரை துபாயில் பல்லாயிரக்கணக்கான சொத்துகள் பற்றிய தகவல்கள் கசிந்ததன் அடிப்படையில் தயாரிக்கப்பட்டன.

இது குறித்த தகவல்களை ‘த சென்டர் ஃபார் அட்வான்ஸ்ட் டிஃபென்ஸ் ஸ்டடிஸ்’ என்ற அமெரிக்க லாப நோக்கமற்ற அமைப்பு சேகரித்தது. அந்தத் தகவல்களை நார்வேயைச் சேர்ந்த ‘E24’ என்ற நிதி அமைப்புடனும் அந்நாட்டின் குற்றக் கும்பல், ஊழல் விசாரணைப் பிரிவுடனும் பகிர்ந்து கொண்டது. இந்தத் தகவல்களைப் பெற இவ்விரு அமைப்புகளும் ஆறு மாதங்களுக்கும் மேலாக ஒருங்கிணைந்து செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதில் கிடைத்த தகவல்களின்படி, முன்னாள் ஆப்கானிய நாடாளுமன்ற நாயகர் ரஹ்மான் ரஹ்மானியாவும் அவரது புதல்வர் அஜ்மலும் துபாயில் நிலச் சொத்து வாங்க $15 மில்லியனுக்கு மேல் செலவிட்டதாக தெரியவந்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் 2001ஆம் ஆண்டில் தலிபான் ஆட்சி வீழ்ந்ததும் அந்நாட்டுக்கு அமெரிக்கா மறுசீரமைப்பு நிதியாக வழங்கிய நிதியில் இருந்து பல மில்லியன் கையாடியதற்காக இவ்விருவரும் தண்டிக்கப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணை அறிக்கையின் ஒரு பகுதி சிங்கப்பூரில் கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றுவதில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள சு ஜியான்ஃபெங்கும் ஒருவர் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாள் மே 17ஆம் தேதி செய்தி வெளியிட்டிருந்தது நினைவுகூரத்தக்கது. இவர் பல மில்லியன் டாலர் பெறுமானமுள்ள சொத்துகளை சிங்கப்பூரில் உள்ள வெளிநாட்டவருக்கு விற்றதாகக் கூறப்படுகிறது

Leave A Reply

Your email address will not be published.