பங்ளாதேஷ் இடைக்கால அரசாங்கத்திற்கு தலைமை ஏற்கிறார் நோபெல் பரிசு பெற்ற பேராசிரியர்.
பங்ளாதேஷில் பிரதமர் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்ட ஷேக் ஹசினாவின் நீண்டகால எதிரியான நோபெல் பரிசு பெற்ற பேராசிரியர் முகம்மது யூனுஸ், இடைக்கால அரசாங்கத்துக்கு தலைமையேற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில வாரங்களாக நாட்டில் தொடர்ந்து நடைபெற்ற மாணவர்களின் மூர்க்கமான ஆர்ப்பாட்டங்களால் பதவியைத் துறந்து ஷேக் ஹசினா தப்பியோடினார். மறுநாள் 84 வயது பேராசிரியர் யூனுஸ் இடைக்கால அரசாங்கத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
‘மைக்ரோலோன்’ என்று சொல்லக்கூடிய சிறுகடன் திட்டத்தைத் தொடங்கியதற்காக அவர் பாராட்டப்பட்டார். ஆனால் திருவாட்டி ஷேக் ஹசினா அவரை பொதுமக்களின் எதிரி என்று கூறி வந்தார்.
தற்போது பிணையில் இருக்கும் பேராசிரியர் யூனுஸ் தமக்கு விதிக்கப்பட்ட ஆறு மாதச் சிறைத் தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்யவிருக்கிறார். அரசியல் நோக்கம் காரணமாக தன் மீது வழக்குத் தொடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
ஷேக் ஹசினாவை பதவி விலக வைத்த மாணவர்கள், ராணுவத்தின் தலைமையிலான அரசாங்கத்தை ஏற்க மறுத்துவிட்டனர்.
பேராசிரியர் யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசாங்கத்தை அமைக்க அவர்கள் தீவிரமாக செயல்பட்டனர்.
இதையடுத்து அதிபர் முகம்மது ஷஹாபுதினும் ராணுவத் தலைவர்களும் மாணவர் தலைவர்களும் ஆலோசனை நடத்தி பேராசிரியர் யூனுசை இடைக்கால அரசாங்கத்தின் தலைமை ஆலோசகராக நியமிக்க முடிவு செய்தனர்.
“தியாகம் செய்த ஏராளமான மாணவர்களின் கோரிக்கையை இந்தச் சிரமமான காலக்கட்டத்தில் எப்படி மறுக்க முடியும்,” என்று பேராசிரியர் யூனுஸ் கூறியுள்ளார்.
பாரிஸ் நகரில் சிறிய மருத்துவ சிகிச்சையை மேற்கொண்டுள்ள அவர் விரைவில் டாக்காவுக்குத் திரும்புவார் என அவரது பேச்சாளர் ஒருவர் கூறினார்.
ஜூலை தொடக்கத்தில் மாணவர்களின் ஆர்ப்பாட்டங்கள் தொடங்கின. அரசாங்க வேலைகள் குறிப்பிட்ட பிரிவினருக்கு ஒதுக்கப்படுவதற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. பின்னர் அது, அரசாங்க எதிர்ப்பு இயக்கமாக மாறியது.
ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் அரசாங்கப் படைகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 400க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். பெரும்பாலான சம்பவங்களில் ஆர்ப்பாட்டங்களை கலைப்பதற்காக பொதுமக்கள் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது.
சென்ற திங்கட்கிழமை மட்டும் நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதையடுத்து ஏராளமான காவல் நிலையங்கள் கொளுத்தப்பட்டன.