கொரோனா காலத்தில் முகக்கவசம் அணிதல் அவசிமாகும் : ஏ.ஜே.எம். முஸம்மில்

கொரோனா தொற்றின் காரணமாக பொது பிரயாணத்தின் போதும், பொது இடங்களிலும் கட்டாயமாக முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பேணல், கை கழுவுதல் உள்ளிட்ட சுகாதார விதிமுறைகளைப் பேணி நடத்தல் அவசிமாகும். இது தொடர்பில் கண்காணிப்பு நடவடிக்கைகளை கண்டிப்பான முறையில் முன்னெடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு ஊவா மாகாண ஆளுநர் ஏ. ஜே. எம். முஸம்மில் அறிவுறுத்தல் விடுத்தார்.


கொவிட் கொரேனா தொற்றுத் தொடர்பில்  இக்காலப்பகுதியில் ஊவா மாகாணத்தின் கல்வி மற்றும் பொது நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் மாகாண கல்வி செயலணியின் விசேட கலந்துரையாடல் ஒன்று ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் அவர்களின் தலைமையில் ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலின் போது ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.


அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
விசேடமாக பொது மக்கள் பிரயாணத்தின் போதும், பொது இடங்களிலும் கட்டாயமாக முகக்கவசம் அணிதல் வேண்டும் சமூக இடைவெளியை பேணுதல் வேண்டும். , கை கழுவுதல் உள்ளிட்ட சுகாதார விதிமுறைகளைப் பேணி நடப்பது அவசியமாகும்.  இது தொடர்பில் சுகாதாரத் துறையினரின்  வலியுறுத்தியதற்கமைய, குறித்த செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தவும், அவை சரியான முறையில் முன்னெடுக்கப்படுகிறதா என்பது தொடர்பில் பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க  வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.


அதேவேளைப் பாடசாலை கட்டமைப்பில் கொவிட் பரவாமல் இருப்பதற்கு முன்னெடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கல்வி பணிப்பாளர்களுக்குத் தெளிவு படுத்தப்பட்டதுடன், க.பொ.த (உஃத) பரீட்சைகள் நடைபெறும் இக்காலப்பகுதியில் பரீட்சை நிலையங்கள் மற்றும் மாணவர்களின் போக்குவரத்தில் சுகாதார நடைமுறைகளை முன்னெடுப்பது தொடர்பில் விசேட வைத்திய அதிகாரிகள் மூலம் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு தெளிவூட்டப்பட்டது. அந்த வகையில் ஊவா மாகாணத்தில் கல்வி நடவடிக்கை சிறந்த முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடலில் பதுளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சுதர்ஷன டெனிபிடிய, ஊவா மாகாண பிரதான செயலாளர், ஊவா மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், ஆளுநரின் செயலாளர், விசேட வைத்திய அதிகாரிகள், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள், போக்குவரத்து மற்றும் சுகாதார சேவை பிரதானிகள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

-இக்பால் அலி

Leave A Reply

Your email address will not be published.