வடக்கில் பாதுகாப்புப் படையினரிடமுள்ள, தனியாருக்கு சொந்தமான காணிகள் விடுவிக்கப்படும்..- பாதுகாப்புச் செயலாளர்
வடக்கில் பாதுகாப்புப் படையினரிடமுள்ள, வடக்கு மாகாண மக்களின் சொந்தமான தனியார் காணிகள் விடுவிக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொண்தா யாழில் தெரிவித்துள்ளார்.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வடமாகாண மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த பாதுகாப்பு செயலாளர் கலந்து கொண்ட ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
பாதுகாப்பு படையினர் வசம் உள்ள வடக்கு மக்களின் தனியார் காணிகளை விடுவிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும், நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் தீர்மானங்களை எடுத்துள்ளதாகவும் அவர் அங்கு தெரிவித்தார்.
எவ்வாறாயினும் எந்தவொரு தீர்மானத்தின் மூலமும் மக்கள் ஒடுக்கப்பட மாட்டார்கள் எனவும் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
வடமாகாணத்தில் ஏற்கனவே மூடப்பட்டிருந்த சில வீதிகள் திறக்கப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு தரப்பினரின் பிடியில் இருந்த சில காணிகளும் மக்களுக்காக விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் மீன்பிடி, நீரியல் மற்றும் கடல் வள அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் அவர்களும் கலந்துகொண்டுள்ளார்.