இணையத்தில் போலியான காணொளிகளை வெளியிட்ட இளைஞர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்
அரசுக்கு எதிராக மக்களை தூண்டும் விதத்தில் , வடக்கில் தமிழீழ நினைவேந்தல் நிகழ்வுகளை ஊக்குவிப்பது போன்ற பொய்யான விளம்பரங்கள் மற்றும் காணொளிகளை வெளியிட்ட குற்றத்திற்காக பத்தேகம கிரிபத்தாவில பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு பத்தேகம பதில் நீதவான் ஸ்ரீயா திஸாநாயக்க யசரத்ன நேற்று (30) உத்தரவிட்டுள்ளார்.
பத்தேகம பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடைய ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் அடைக்கப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (தென் மாகாணம்) சந்தேகநபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
சந்தேக நபர் சார்பில் சட்டத்தரணி லசந்த விஜேநாயக்க, சட்டத்தரணி நுவன் செனவிரத்ன மற்றும் சட்டத்தரணி லீலாநந்த டயஸ் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.