தற்போதைய அரசு பதவி விலகி மீண்டும் மொட்டுவுக்கு ஆட்சியை வழங்க வேண்டும்… அடுத்த ஜனாதிபதி நாமல்!

தற்போதைய அரசாங்கம் பதவி விலகி மீண்டும் பொதுஜன பெரமுனவுக்கு ஆட்சியை வழங்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், கடந்த சில நாட்களாக அமைதியாக இருந்தாலும், நாமல் ராஜபக்சவுடன் கிராமம் கிராமமாக சென்று தீவிர அரசியலில் ஈடுபட்டதாக கூறினார்.
இந்த நாட்டின் அடுத்த தலைவர் நாமல் ராஜபக்ச தான் என்று நம்புவதாகவும், மகிந்த ராஜபக்ச முகாமின் அடுத்த தலைவராக நாமல் ராஜபக்சவுடன் இணைந்து எதிர்காலத்தில் பயணிக்க விரும்புவதாகவும் திஸ்ஸ குட்டியாராச்சி கூறினார்.
2015 இல் மகிந்த ராஜபக்சவின் தோல்வியுடன் நாடு பின்னோக்கி சென்றதாகவும், அவர்கள் மீது திருடர்கள் என்று குற்றம் சாட்டி பொய் முத்திரை குத்தியதே காரணம் என்றும் அவர் மேலும் கூறினார்.
“மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த அரசை விரட்டியடிப்பதற்கு முன், பதவி விலகி மீண்டும் அரசை பொதுஜன பெரமுனவின் செயல்பாட்டுக் குழுக்களிடம் ஒப்படையுங்கள், இந்த நாட்டை கட்டியெழுப்புவதில் அனுபவம் வாய்ந்த குழு அது. இந்த நாட்டின் எதிர்காலத்திற்கு தலைமை தாங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்… சட்டத்தை அமல்படுத்தவும், அரசியல் வேட்டையை நிறுத்தவும்” என அவர் மேலும் கூறினார்.