தையிட்டி விகாரை சுற்றாடல் காணிகளை விடுவிக்க முடிவு? – தேர்தலுக்கு முன்னர் நடக்கலாம்.

யாழ். வலிகாமம் வடக்கு, தையிட்டியில் ஆக்கிரமிக்கப்பட்ட பொதுமக்களின் நிலத்தில் கட்டப்பட்டிருக்கும் விகாரையைச் சூழ இருக்கின்ற காணிகள் பலவற்றை விடுவிப்பதற்கு அரச உயர் மட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகத் தெரியவருகின்றது.

எதிர்வரும் 6 ஆம் திகதி உள்ளூராட்சி சபைத் தேர்தல் வாக்களிப்புக்கு முன்னர் பெரும்பாலும் அடுத்து வரும் சில தினங்களில் இந்தக் காணி விடுவிப்பு இடம்பெறும் சாத்தியங்கள் இருக்கின்றன எனத் தெரிகின்றது.

இப்போது தையிட்டி விகாரை கட்டப்பட்டுள்ள காணிகளைத் தவிர்த்து சுற்றாடலில் இன்னமும் பொதுமக்கள் செல்வதற்கு அனுமதிக்கப்படாத காணிகளை அடையாளம் கண்டு விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை அரசு ஏற்கனவே எடுத்திருப்பதாகத் தெரியவருகின்றது.

இதேவேளை, கிளிநொச்சியில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற அரசுத் தரப்பினரின் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, போரின்போது பாதுகாப்புப் படையினரால் கையகப்படுத்தப்பட்ட பொதுமக்களுக்குச் சொந்தமான அனைத்துக் காணிகளையும் மீண்டும் விடுவித்து மக்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தையிட்டி விகாரையைச் சுற்றியுள்ள ஏனைய காணிகளை விடுவிப்பதன் மூலம் தையிட்டி விகாரை விவகாரத்தில் அரசுக்கு எதிராகக் கிளம்பியுள்ள எதிர்ப்பு அலைகளை சற்று தணிக்கச் செய்யலாம் என்றும், தேர்தலில் வடக்கு மக்களின் நம்பிக்கையைப் பெறலாம் என்றும் அரசு தரப்புக் கருதுவதாகத் தெரிகின்றது.

Leave A Reply

Your email address will not be published.