வியட்நாமில் ஜனாதிபதிக்கு இன்று அமோக வரவேற்பு!

வியட்நாமின் நோய் பாய் சர்வதேச விமான நிலையத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது.

வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங்கின் அழைப்பின் பேரில் வியட்நாமுக்கு அரச விஜயம் மேற்கொண்டு நேற்று சனிக்கிழமை நாட்டிலிருந்து புறப்பட்ட ஜனாதிபதி அநுரகுமார, இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் வியட்நாமின் நோய் பாய் சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்தார்.

அங்கு, ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர், வியட்நாம் கம்யூனிஸக் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும் வெளியுறவுத் துறை பிரதி அமைச்சருமான நுயென் மான் குவோங் உள்ளிட்ட அரச பிரதிநிதிகளால் அமோகமாக வரவேற்கப்பட்டனர்.

இந்த வரவேற்பு நிகழ்வில் இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் டிரின் தி டேம்,வியட்நாமுக்கான இலங்கைத் தூதுவர் போசித பெரேரா மற்றும் இலங்கைத் தூதரகத்தின் பிரதிநிதிகள் குழுவும் கலந்துகொண்டனர்.

இன்று மாலை, ஜனாதிபதி அநுரகுமார, ஹனோயில் உள்ள வியட்நாம் கம்யூனிஸ கட்சியின் மத்திய குழு தலைமையகத்தில் கம்யூனிஸக் கட்சியின் பொதுச்செயலாளர் டோ லாமைச் சந்திக்கவுள்ளார்.

ஜனாதிபதி நாளை திங்கட்கிழமை வியட்நாம் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களிலும் ஈடுபடவுள்ளார்.

மேலும், மே 6 ஆம் திகதி ஹோ சி மிங் நகரில் ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகள் வெசாக் தினக் கொண்டாட்டங்களில் பிரதம விருந்தினராகக் கலந்துகொள்ளும் ஜனாதிபதி அநுரகுமார, சிறப்புரை நிகழ்த்துவார்.

இந்த விஜயத்தின்போது இரு தரப்பினருக்கும் இடையே பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கைச்சாத்திடவும், வர்த்தக சமூகத்துடன் கலந்துரையாடல்களை நடத்தவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த அரச விஜயத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் சிரேஷ்ட அரச அதிகாரிகள் குழுவினரும் இணைந்துகொண்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.