துப்பாக்கிச்சூடுகளால் அதிரும் இலங்கை கொலைகளைத் தடுக்க தவறிவிட்டது அநுர அரசு.

“கடந்த 8 மாதங்களில் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் 79 துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் 52 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து நடைபெறும் இந்த வன்முறைகள், கொலைகள் மற்றும் அச்சுறுத்தல்களைத் தடுக்க அநுர அரசு தவறிவிட்டது.” – என்று நாடாளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

நிலையியற் கட்டளை 27 (2) இன் கீழ் கேள்விகளை எழுப்பிய அவர், அரசின் செயற்பாடுகள் தொடர்பில் பின்வரும் முக்கிய விடயங்களை முன்வைத்தார்.

துப்பாக்கிச்சூடுகள் தொடர்பில் அரசின் திட்டம் எங்கே?

நாட்டளவில் இடம்பெறும் துப்பாக்கிச்சூடுகள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு எதிரான அரசின் தற்போதைய வேலைத்திட்டம் போதுமானதா என்பதையும், அது இல்லை என்றால், தடுப்பதற்கான புதிய திட்டத்தைச் சபையில் முன்வைக்குமாறும் கேள்வி எழுப்பப்பட்டது.

தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார தாக்கம்

வன்முறை அதிகரிப்பது தேசிய பாதுகாப்பைப் பாதிப்பதுடன், வெளிநாட்டு முதலீட்டாளர்களையும் சுற்றுலாப் பயணிகளையும் அச்சுறுத்தும். இதற்காக அரசு எவ்வளவு கவனம் செலுத்தியுள்ளது என்றும், இதற்கான நடவடிக்கைகள் எவை என்பதைத் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

போதைப்பொருள் மற்றும் அதன் தாக்கம்

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மத்தியில் ஏற்படும் மோதல்களில் பொதுமக்கள் பலியாகின்றனர். இதன் அடிப்படையில், அரசின் திட்டம் தோல்வியடைந்துள்ளதாகத் தெரிவித்து, அதற்கான மாற்றுத் தீர்வுகள் குறித்து விளக்குமாறு வலியுறுத்தப்பட்டது.

அரசியல்வாதிகள் மீது அச்சுறுத்தல்கள்

நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் தொடர்பாக அரசின் நிலைப்பாடு என்ன? மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மற்றும் நடவடிக்கைகளின் நிலை என்ன? என்பன குறித்து விளக்கம் கோரப்பட்டது.

இந்த விடயங்களில் தெளிவான பதில் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினார்.

Leave A Reply

Your email address will not be published.