அமெரிக்கா தொடங்கிய போரை நாங்கள் முடிப்போம்” – ஈரான் கடுமையான எச்சரிக்கை!
இஸ்ரேல், கடந்த 13ஆம் தேதி “Operation Rising Lion” என்ற பெயரில் ஈரானின் பர்தவ், நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் ஆகிய முக்கிய அணு உலைகளில் தாக்குதல் நடத்தியது. இது ஈரானின் அணு திட்டத்தை குறிவைத்ததென இஸ்ரேல் கூறியுள்ளது. இதற்கு பதிலாக ஈரானும் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டு, இரு நாடுகளுக்கிடையே தீவிரமான போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவும் ஈரான் மீது நேரடி தாக்குதலில் ஈடுபட்டு இருப்பதாகத் தெரியவந்துள்ளது. இந்த தாக்குதலை வெற்றிகரமானதாகக் கூறிய டிரம்ப், “உலகத்தில் வேறு எந்த ராணுவமும் இதுபோல் செய்ததில்லை” என பெருமிதம் தெரிவித்தார். ஆனால், இந்த தாக்குதலால் கடும் கோபமடைந்த ஈரான், “அமெரிக்கா தொடங்கிய போரை நாங்கள் முடித்து வைப்போம்” என நாட்டின் தலைவர் அயத்துல்லா அலி காமேனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதற்கு மேலும், பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படை தளங்கள் மீது உடனடி தாக்குதல் நடத்த இது சரியான தருணம் என ஈரானின் உயரதிகாரி ஒருவர் அறிவித்துள்ளார். இதனுக்குப் பதிலாக ஈரான் தாக்கினால், அதைவிட பலத்த தாக்குதல் நடத்தப்படும் என டிரம்பும் எச்சரித்துள்ளார்.
இந்த சூழ்நிலையில், அமெரிக்க தூதரகங்களுக்கு உலகம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், ஈராக், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற வளைகுடா நாடுகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை ஈரான் பயன்படுத்திய 470 டிரோன்களை அழித்துவிட்டோம் என இஸ்ரேல் கூறிய நிலையில், அமெரிக்க ஆதரவுடன் ஈரானை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
