மூதூர் பிரதேச சபையை கைப்பற்றியது தமிழரசு! நான்கு தசாப்தங்களுக்குப் பின்னர் தமிழர் ஒருவர் தவிசாளராகத் தெரிவு.
திருகோணமலை, மூதூர் பிரதேச சபையை இலங்கைத் தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது.
மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு இன்று பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் இடம்பெற்ற தவிசாளர் தெரிவில், இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த செல்வரத்தினம் பிரகலாதன் தவிசாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் .
கடந்த நான்கு தசாப்தங்களுக்குப் பின்னர் தமிழர் ஒருவர் மூதூர் பிரதேச சபையின் தவிசாளராக இம்முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய தவிசாளர் தெரிவில் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 22 உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இவர்களில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் 5 பேர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் 4 பேர், தேசிய மக்கள் சக்தி சார்பில் 3 பேர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் 3 பேர், ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் 2 பேர், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி சார்பில் 2 பேர், தேசிய காங்கிரஸ் சார்பில் ஒருவர், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி சார்பில் ஒருவர், சுயேச்சைக் குழு சார்பில் ஒருவர் என அங்கம் வகிக்கின்றனர்.
தவிசாளர் தெரிவில் இருவர் போட்டியிட்டனர். இதில் இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த செ.பிரகாலதனும், ஐக்கிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த எம்.றிபானும் போட்டியிட்டனர்.
பகிரங்க வாக்கெடுப்பின் மூலம் இலங்கைத் தமிழரசுக் கட்சி சபையைக் கைப்பற்றியது.
உப தவிசாளராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பி.டி.எம்.பைசர் தெரிவு செய்யப்பட்டார்.
