உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பிள்ளையான் வாய்திறக்கவே இல்லை! அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிடுவது முற்றிலும் பொய் என்கின்றார் கம்மன்பில.
இராணுவத்தினரே உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதலை நடத்தினர் என்று பிள்ளையான் ஊடாக வாய்மூல சாட்சியத்தைப் பெறவே இந்த அரசு முயற்சிக்கின்றது.
அஸாத் மௌலானாவை அரச தரப்பு சாட்சியமாக மாற்றிக் கொண்டு உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதலை இராணுவத்தின் மீது சுமத்தவே அரச தரப்பு எதிர்பார்க்கின்றது. இந்தக் குண்டுத் தாக்குதல் பற்றி பிள்ளையான் ஏதும் குறிப்பிடவில்லை. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிடுவது முற்றிலும் பொய்யானது.”
இவ்வாறு பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
“தமிழ்ப் பிரிவினைவாதிகளின் நிதியை இந்த அரசு பெற்றுக்கொண்டுள்ளது. தமிழ்ப் பிரிவினைவாதிகளை மகிழ்விப்பதற்கு விடுதலைப்புலிகளில் இருந்து விலகி இராணுவத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிய பிள்ளையானைப் பலிகொடுக்க இந்த அரசு முயற்சிக்கின்றது. நன்றிக் கடன் நிமித்தமே பிள்ளையானுக்காக முன்னிலையாகியுள்ளேன்.” – என்றும் உதய கம்மன்பில குறிப்பிட்டார்.
உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதலைப் பிள்ளையான் சிறையில் இருந்தவாறே முன்கூட்டியதாகவே அறிந்துள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கடந்த புதன்கிழமை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் குறிப்பிட்ட விடயம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துரைக்கும்போதே உதய கம்மன்பில மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால 2025.04.10 ஆம் திகதியன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் ‘தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல் தொடர்பில் சர்ச்சைக்குரிய பல விடயங்களை விசாரணையின் போது குறிப்பிட்டுள்ளர்’ என்று தெரிவித்தார். இதனை நம்பி ஜனாதிபதியும் ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை நாட்டு மக்களுக்குப் பகிரங்கப்படுத்துதாகக் குறிப்பிட்டார்.
பிள்ளையானை நான் சிறையில் சென்று சந்தித்தேன். குண்டுத் தாக்குதல் தொடர்பில் பிள்ளையானிடம் விசாரணை அதிகாரிகள் ஏதும் கேட்கவும் இல்லை, அவரும் ஏதும் குறிப்பிடவும் இல்லை. ஆகவே, அமைச்சர் ஆனந்த விஜேபால பொய்யுரைத்தார் என்பதை ஊடகங்களிடம் தெரிவித்துக்கொள்கின்றேன்.
உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல் சம்பவத்துக்காகப் பிள்ளையான் கைது செய்யப்பட்டார் என்று குறிப்பிடுவது பொய், அவ்வாறு குறிப்பிடுபவர்களுக்குப் பைத்தியம். கிழக்கு பல்கலைக்கழகத்தில் உபவேந்தரைக் கடத்திக் காணாமல் ஆக்கிய சம்பவத்துக்காகவே பிள்ளையாள் கைது செய்யப்பட்டுள்ளார் என்று அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி குறிப்பிட்டிருந்தார். ஆகவே, சுனில் ஹந்துனெத்தி பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவுக்கும், ஜனாதிபதிக்கும் பதிலளித்துள்ளார்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால அண்மையில் நாடாளுமன்றத்தில் பிள்ளையான் பற்றி குறிப்பிட்டது முற்றிலும் பொய்யானது. பிள்ளையான் கைது செய்யப்பட்டமைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் இரண்டு அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் பிள்ளையான் தமிழ் மொழியில் வழங்கிய வாக்குமூலத்தின் பிரதியைப் பொலிஸார் நீதிமன்றத்துக்கு சமர்ப்பித்துள்ளனர்.
தமிழ் மொழி மூல வாக்குமூலம் ஆங்கில மொழிக்கு மொழிப்பெயர்க்கப்பட்டு எனக்குக் கிடைக்கப் பெற்றுள்ளது. அந்த வாக்குமூலத்தில் எவ்விடத்திலும் குண்டுத் தாக்குதல் பற்றி குறிப்பிடப்படவில்லை. உபவேந்தர் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் பற்றியே கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
தமிழ்ப் பிரிவினைவாதிகளின் நிதியை இந்த அரசு பெற்றுக்கொண்டுள்ளது. தமிழ்ப் பிரிவினைவாதிகளை மகிழ்விப்பதற்கு விடுதலைப்புலிகளில் இருந்து விலகி இராணுவத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிய பிள்ளையானைப் பலிகொடுக்க இந்த அரசு முயற்சிக்கின்றது. நன்றிக் கடன் நிமித்தமே பிள்ளையானுக்காக முன்னிலையாகியுள்ளேன்.
இராணுவத்தினரே உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதலை நடத்தினர் என்று பிள்ளையான் ஊடாக வாய்மூல சாட்சியத்தைப் பெறவே இந்த அரசு முயற்சிக்கின்றது. அஸாத் மௌலானாவை அரச தரப்பு சாட்சியமாக மாற்றிக்கொண்டு குண்டுத் தாக்குதலை இராணுவத்தினர் மீது சுமத்தவே அரசு முயற்சிக்கின்றது. குண்டுத் தாக்குதல் பற்றி பிள்ளையான் ஏதும் குறிப்பிடவில்லை. அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிடுவது முற்றிலும் பொய்யானது.” – என்றார்.
……………………..
