தேன் எடுக்கச் சென்ற நபர் யானை தாக்கி உயிரிழப்பு – திருகோணமலையில் துயரம்.

திருகோணமலை, மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தளாய் காட்டுப் பகுதியில் தேன் எடுக்கச் சென்றவர் மீது யானை தாக்கியதில் மேற்படி நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்தத் துயரச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது என்று மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

கந்தளாய் காட்டுப் பகுதிக்குத் தேன் எடுப்பதற்காக மூன்று பேர் சென்றனர் எனவும், இதன்போது யானை ஒன்று மேற்படி நபர்களைத் தாக்க முற்பட்டபோது மூவரும் வெவ்வேறாகப் பிரிந்து ஓடினர் எனவும், அவ்வேளை ஒருவரை யானை தாக்கியது எனவும் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

மொரவெவ பொலிஸார் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் இணைந்து காட்டுப் பகுதிக்குச் சென்று உயிரிழந்தவரின் சடலத்தை மீட்டு வந்தனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காகத் திருகோணமலை பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

யானையின் தாக்குதலில் ஹெல்லென – மித்தெனிய பகுதியைச் சேர்ந்த ஜீ.எம்.ரஞ்சித் (வயது 53) என்பவரே உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மொரவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.