ஜனநாயகப் போராளிகள் கட்சியும் ஹர்த்தாலுக்கு முழு ஆதரவு.

“வடக்கு, கிழக்கின் தமிழர் தாயகப் பிரதேசங்களில் செறிவான இராணுவப் பிரசன்னம் அகற்றப்பட்டு எமது மக்களின் பாரம்பரிய வரலாற்று நிலங்கள் எமது மக்களிடமே கையளிக்கப்பட வேண்டும் என நாளை திங்கட்கிழமை ஏற்பாடாகியுள்ள முழுமையான கதவடைப்புப் போராட்டத்துக்கு எமது முழுமையான ஆதரவை நாம் வழங்குகின்றோம்.” – என்று ஜனநாயகப் போராளிகள் கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அந்தக் கட்சியின் செயலாளர் க.துளசி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“வேண்டுமென்றே சில தரப்புகள் இதன் நதி மூலம் ரிசி மூலம் தேடி போராட்டங்களைக் குழப்பியடித்து இனத்தின் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது.

அன்பான எமது உறவுகளே அதீத இராணுவப் பிரசன்னம் இன்றுவரை எமது தாயக நிலங்களில் ஏற்படுத்தி வருகின்ற இடர்பாடுகளை சந்தித்து அவற்றின் இழப்பை உணர்ந்து கொண்டவர்கள் நாங்கள். நல்லூர் திருவிழா நாட்களிலோ, மடுத்திருவிழா நாட்கள் என்பதனாலோ சிங்கள இராணுவம் எம் மீது ஷெல் தாக்குதலை நிறுத்துவதில்லை என்கின்ற வராலாற்று வலியை உங்களுக்கு ஞாபகம் ஊட்ட விரும்புகின்றேன். போராட்டம் வெற்றியோ, தோல்வியோ தொடர்ந்து போராடும் மன வலிமையைத் தந்தவன் வழியில் போராடியவர்கள் நாங்கள்.

எமது மக்களின் எதிர்கால நலன்கள் கருதி தாயகத்தின் செறிவான இராணுவப் பிரசன்னம் அகற்றப்பட வேண்டி யார் அழைப்பினும் நாம் எமது ஜனநாயக ஆதரவைத் தொடர்ந்து வழங்குவோம்.” – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.