நேற்றும் ஒன்றன் மேல் ஒன்றாக 2 எலும்புக்கூடுகள் அடையாளம்.

செம்மணி மனிதப் புதைகுழியில் ஒன்றன் மேல் ஒன்றாகக் காணப்படும் இரண்டு எலும்புக்கூட்டுத் தொகுதிகள் நேற்று சனிக்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்வுப் பணிகள் நேற்றுக் காலை முதல் மாலை வரையில் முன்னெடுக்கப்பட்டன. அதன்போது ஒன்றன் மேல் ஒன்றாக இரண்டு எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு, அதனைச் சுற்றப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த இரண்டு எலும்புக்கூடுகளும் இன்று ஞாயிற்றுக்கிழமை முற்றாக அகழ்ந்து எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை ஒரு எலும்புக்கூட்டின் நெஞ்சுப் பகுதியில் மற்றைய எலும்புக் கூட்டின் தலைப் பகுதி காணக்கூடியவாறு அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூட்டுத் தொகுதி சுற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்று சனிக்கிழமை மாலை அவற்றை அகழ்ந்து எடுக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன

அதேவேளை , கடந்த சில தினங்களுக்கு முன்னான அகழ்வுப் பணிகளின் போதும் பின்னிப் பிணைந்த நிலையில் இரண்டு எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் ஒன்றன் மேல் ஒன்றாக இதுவரையில் மூன்று சந்தர்ப்பங்களில் 6 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.