கிளிநொச்சியில் குண்டு வெடித்து இருவர் படுகாயம்.

மோட்டார் குண்டைப் பிரித்து அதிலிருந்த வெடிமருந்தை எடுக்க முயன்றபோது, அது வெடித்ததில் இருவர் படுகாயமடைந்தனர்.

கிளிநொச்சி, ஆனையிறவு – தட்டுவன்கொட்டி பகுதியில் நேற்று திங்கட்கிழமை முற்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதில் யாழ்ப்பாணம், தென்மராட்சி – கச்சாயைச் சேர்ந்த சிங்கராசா அனுராஜ் (வயது 26), கேதீஸ் (வயது 50) ஆகியோரே படுகாயமடைந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் அறிய வருபவை வருமாறு,

படுகாயமடைந்தவர்களில் ஒருவரான அனுராஜ் தனது தாயாரின் வீட்டுக்குப் படுகாயமடைந்த மற்றையவரையும் அழைத்துச் சென்றுள்ளார். இருவரும் அந்தப் பகுதியில் வெடிக்காத குண்டுகளை எடுத்து அவற்றில் இருந்து வெடி மருந்து சேகரித்து வந்துள்ளனர் என்று கூறப்படுகின்றது.

இந்தநிலையில், இருவரும் நேற்று பாழடைந்த வீடு ஒன்றில் இருந்து மோட்டார் குண்டு ஒன்றை எடுத்து அதனைப் பிரித்து, அதில் இருந்த வெடி
மருந்தை எடுக்க அவர்கள் முயன்றுள்ளனர். அப்போது, அந்தக் குண்டு வெடித்ததில் இருவரும் படுகாயமடைந்தனர் என்று பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, இருவரும் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர். இவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு இரு கால்களும் கடுமையாகச் சிதைந்தமையால் சத்திர சிகிச்சை மூலம் அவை வெட்டி அகற்றப்பட்டன என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.